தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.

அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்நிலையில், லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு கொரோனா 2ஆம் அலையை ஒவ்வொரு மாநிலமும் எப்படிக் கையாண்டது என்பது குறித்து சர்வே நடத்தியது.

கடந்த ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டதாக 59% மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

இந்தியாவில் சுகாதார உட்கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இதனால்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும்கூட கொரோனா 2ஆம் அலையைத் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கையாள முடிந்தது என்று தெரிய வந்துள்ளது.

அதேபோல ஆந்திர அரசு சிறப்பாகக் கையாண்டதாக 54% மக்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட் & ஒடிசா அரசுகளுக்கு ஆதரவாக 43% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கேரள அரசுக்கு 39% பேர் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம் டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கொரோனா 2ஆம் அலையை மிக மோசமாகக் கையாண்டதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆனதாகவும், இதனால் சரியான சிகிச்சை கிடைக்க முடியாமல் அதிக உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.