புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு – காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?

Share this News:

புதுச்சேரி (26 ஜன 2021): புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமசிவாயம் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றும் எம் எல் ஏ தீப்பாய்ந்தான் ராஜினாமா செய்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு எற்பட்டுள்ளது.

பாஜகவுடன் இணையும் நோக்கத்தில் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி வந்த நமசிவாயம், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.

இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பா.ஜ.க-வில் இணைவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், “பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அமைச்சர் என்பதையும் மறந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசி, கட்சியைவிட்டு விலகப்போகிறேன் என்றும் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பிலிருந்து விலகி வாருங்கள் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து, கட்சிக்கு துரோகம் செய்துவருகிறார். அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் என இரட்டைப் பதவிகளை வகிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று தலைமை அறிவுறுத்தியதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தலைவராக அழகு பார்த்த காங்கிரஸிலிருந்து விலகி, தற்போது மாற்றுக் கட்சிக்குப் போகும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நிக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.

அதையடுத்த சில நிமிடங்களில் சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தனர்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலம் 12 குறைந்திருப்பதால், ஆட்சி கவிழுமா?  என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் புதுச்சேரி  சட்டப்பேரவையில் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 15 எம்.எல்.ஏ-க்களே போதும். அதன்படி பார்த்தால் காங்கிரஸ் தற்போது மூன்று தி.மு.க., ஒரு சுயேச்சை என 16 எம்.எல்.ஏ-க்களுடன் இருக்கிறது. அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் நான்கு அ.தி.மு.க., இரண்டு பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களுடன் 13 எம்.எல்.ஏ-க்களுடன்தான் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கு வாய்பில்லை” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


Share this News:

Leave a Reply