ததஜ தலைமை அலுவலகம் சீல் வைக்க முயற்சி -பதற்றம்!

922

சென்னை(06/01/2021): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை அலுவலகத்தை முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென சீல் வைக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென சீல் வைப்பதற்காக தமிழக உள்துறை செயலகத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இயக்கத்தின் தொண்டர்கள் உடனடியாக அலுவலகத்தின் முன் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்ன காரணமாக இருந்தாலும் தங்களுக்கு முன்னரே முன்னறிவிப்பு தரவில்லை என்றும் சட்டத்துக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுகின்றனர் எனவும் அலுவலகத்தினுள் பல்வேறு மனிதநேயப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், தங்களுக்கு ஒருநாள் அவகாசம் தரவேண்டுமெனவும் ததஜ தலைவர்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், உடனடியாக மூடியே தீருவோம் எனவும் உயரதிகாரிகளின் உத்தரவில் வந்துள்ளதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் சீல் வைக்க வந்த அதிகாரி தெரிவித்தார். காவல்துறையினர் பெரும்பான்மையாக குவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ததஜ தொண்டர்களும் பெருமளவில் கூடி எதிர்ப்பு கோஷம் முழங்கி வருகின்றனர்.

செய்தி கேள்விபட்டு எஸ் டி பி ஐ உட்பட பல அரசியல் கட்சி நிர்வாகிகளும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் நிலவி வருகிறது.