இன்னொரு பேரிடரை தாங்கிக் கொள்ள முடியாது – தமிழக அரசுக்கு கோரிக்கை!

சென்னை (05 ஜூலை 2020): சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மீண்டும் ஒரு 2015வேண்டாம். வரும் முன் காத்திட நடவடிக்கை எடுங்கள்” என்று தொழிலாளர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் விடுத்துள்ள கோரிக்கையில், “2015ம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட நடப்பு ஆண்டில் 10மடங்கு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு என கடந்த சில தினங்களுக்கு முன் ஐஐடி எச்சரிக்கை செய்துள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் வழித்தடங்கள் எல்லாம் சமூக விரோதிகளாலும், பொதுமக்கள் சிலராலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் தான் பெரும்பாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக அவதியுறும் சூழல் ஏற்படுகிறது.

தற்போது கொரோனா நோய் தொற்று பேரிடர் காரணமாக மக்கள் முற்றிலுமாக தங்களின் வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையையும் இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் அடுத்து வெள்ளப்பெருக்கினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அதனை தாங்கும் சக்தி மக்களிடம் நிச்சயமாக இல்லை.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

எனவே தமிழக அரசு அதனை கவனத்தில் கொண்டு “வரும் முன் காப்போம்” என்கிற அடிப்படையில் மழை நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் போர்க்கால அடிப்படையில் அகற்றிடவும், சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளின் கறைகளும், மதகுகளும் வலுவாக இருக்கிறதா..? என்பதை (24×7) தொடர்ந்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

மேலும் மழை நீர் சேகரிப்பு இல்லாத வீடுகளில் அத்திட்டத்தை செயல்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்துவதோடு, மழை நீர் சேகரிப்பு திட்டம் இல்லாத வீடுகளில் உடனடியாக அதனை செயல்படுத்த மக்களுக்கு போதிய நிதியுதவியோ அல்லது மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கும் உறைகளோ வழங்கிட ஆவண செய்யுமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.