தமிழகத்தில் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை!

Share this News:

சென்னை (17 மார்ச் 2020): தமிழக விமான நிலையங்களில் நேற்று வரை மொத்தம் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர் பலி வாங்கிவரும் கொரோனா, இந்தியாவிலும் இரண்டு உயிர்களை கொன்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

முக்கியமாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:

நான்கு விமான நிலையங்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என இதுநாள்வரை (மார்ச் 16) மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில், கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள 2,221 பேர், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சை தேவைப்படும் 22 பேருக்கு மருத்துவமனை சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான நிலையங்களில் இதுவரை மொத்தம் 98 பயணிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றில் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் சிகிச்சைப் பின் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். இருவரின் பரிசோதனை முடிவுகள் விரைவில் பெறப்பட உள்ளன என்று தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply