புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல தடை!

Share this News:

சென்னை (14 டிச 2021): கொரோனா நோய் தடுப்பு தொடர்பான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது, நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதனை தவிர்க்கும் வகையில் வரும் 31-ஆம் தேதியும், ஜனவரி 1-ஆம் தேதியும் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாத காரணத்தினால், கற்றல் திறன் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுழற்சி முறை இன்றி இயல்பாக வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் இயல்பாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி வருவதால் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நோய் பரவலை தடுக்கும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேணடும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply