தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

Share this News:

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தமிழக சட்டசபையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படுமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பதிலளித்தார்.

அதே நேரத்தில், ‘பாஜகவின் கூட்டணியுடன் அரசாங்கம் நடைபெறும் பீகார் மாநிலத்தில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் நிறைவேற்றினால் என்ன தவறு?’ என்று அதிமுகவின் மூத்த தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவையெல்லாம் அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றத்திற்குரிய அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில்தான் திடீர் பயணமாக அதிமுகவின் மூத்த அமைச்சர்களான ஜெயக்குமாரும், தங்கமணியும் இன்று டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். எனவே, விரைவிலேயே சட்டசபையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply