அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீச்சு – குற்றவாளிகளுக்கு காவலர் உதவி?

மதுரை (16 ஆக 2022): மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பெண்கள் தலைமறைவாக இருக்க காவலர் ஒருவர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த பாஜக தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த மூன்று பெண்களும் தலைமறைவாக இருப்பதற்கு மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு காவலர் உதவியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகல் முடிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினர் சிலர் இருப்பதைப் பார்த்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பிய பிறகு அவருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில், மரஞ்சலி நிகழ்வு முடிந்த பிறகு விமான நிலைய வளாகத்தில் இருந்து தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த வாகனம் மீது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜகவினர் செருப்பு வீசினர்.

அந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்), 341 (முறையற்று தடுத்தல்), 355 (தாக்குதல் அல்லது குற்றம் இழைக்க பலத்தை பயன்படுத்துதல்) மற்றும் 34 (ஒரே நோக்குடன் பலர் கூட்டு சேருதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பாஜகவை சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்: