அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை!

Share this News:

சென்னை (12 ஜூலை 2020): இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இது கொரோனா கோலோச்சும் காலம். கொரோனாவுக்கு மருந்தில்லை. தடுப்பூசிதான் நிலையான தீர்வு. அதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா போன்றதொரு வைரஸ்தான் கிரீமிலேயரும்.

இதற்கு முன் இல்லாத கொரோனா வைரஸை சீனா கண்டுபிடித்தது. அதைப் போலத்தான், அரசமைப்புச் சட்டத்திலேயே இல்லாத கிரீமிலேயரை இந்திய உச்ச நீதிமன்றம் கண்டுபிடித்தது. அதற்குக் காரணம் உண்டு. உச்ச நீதிமன்றத்தில் காலகாலமாக இருப்பவர்கள் 99 விழுக்காடு பேர் மேல்சாதியரே; இடஒதுக்கீடு இல்லாமலே பதவிக்கு வருபவர்கள். அவர்கள் தங்கள் மேல்சாதியருக்காக உருவாக்கிய கிரீமிலேயரை, ஒன்றிய மேல்சாதியர் அரசு கையாள்வதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றால் மாற்ற வேண்டியது அரசமைப்புச் சட்டத்தைத்தானே ஒழிய இடஒதுக்கீட்டை அல்ல என்றார் சமூக நீதிக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியார் அவர்கள். அவரது போர்க்குரல்தான், இடஒதுக்கீட்டுக்காகவே முதல் முறையாக அரசமைப்புச் சட்டத்தை 1951இல் திருத்த வைத்தது.

1980இல் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை 1990இல் நடைமுறைப்படுத்திய சமூக நீதிக் காவலர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) நாடாளுமன்றத்தில் பேசியது நினைவுகூரத்தக்கது: “சமூகத்திலும் கல்வியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது ஜனநாயகத்தில் அவர்கள் பங்களிக்க ஒரு வாய்ப்பே தவிர, வேறில்லை. இடஒதுக்கீடு இந்த அதிகாரக் கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஓர் இடம் அளிக்கிறது. சமம் அற்ற நிலையை சம நிலை என்பது ஆகப் பெரும் அநீதி. அதைச் சரி செய்வது அவசர அவசியம் என்பதை இந்த அவைக்கு உணர்த்த விரும்புகிறேன்.”

ஆனால் இடஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்ட முனைந்திருக்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு. அதற்குச் சாதகமாகவே, மக்கள்தொகையில் 65% பேர் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடும் தரக்கூடாது என்றுதான், அரசமைப்புச் சட்டத்தைப் பேண வேண்டிய உச்ச நீதிமன்றமே சட்டவிரோதமாக, தானாகவே இந்தக் கிரீமிலேயர் பொருளாதார அளவு முறையை தீர்ப்பாக அளித்தது. இது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் குற்ற மற்றும் ஃபாசிச நடவடிக்கை மட்டுமல்ல; இத்தகைய குற்ற மற்றும் ஃபாசிச நடவடிக்கை எடுக்க அரசையும் தூண்டுவதாகும்.

அந்தத் தீர்ப்பு இடஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு விதித்தது. முதலில், ஒரு லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தவர்க்கு இடஒதுக்கீடு கிடையாது என விதிக்கப்பட்டது; 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வரம்பு உயர்த்தப்படவேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2004இல்தான் வர்மான வரம்பை ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது அரசு. 2008இல் 4.5 லட்சம், 2013இல் 6 லட்சம், 2017இல் 8 லட்சம் என உயர்த்தப்பட்டது.

இந்த 2020இல் கிரீமிலேயர் வரம்பை 16 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஒன்றிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு அதை விட்டு, கிரீமிலேயரை வேறு விதமாகக் கணக்கிட இருக்கிறது. அதாவது, பெற்றோரின் ஊதியம் மற்றும் அவர்களின் விவசாய வருமானத்தையும் சேர்த்துக் கணக்கிட அரசு திருத்தம் கொண்டுவருகிறது. இதன்மூலம் முற்றாகவே பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறமுடியாமல் போக நேரிடும். இது சட்டப்படியான அவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை ஒழித்துக்கட்டுவதற்கான சதியே அன்றி வேறில்லை.

இடஒதுக்கீடு பெற வேண்டியவர்கள், சமூக அளவிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பு குடிமக்களே (socially and educationally backward classes of citizens) என்று மிகத் தெளிவாக வரையறுத்திருக்கிறது நம் அரசமைப்புச் சட்டம். ஆனால் அதற்கு நேர்மாறாக, சட்டவிரோதமாக உச்ச நீதிமன்றமே பொருளாதார அளவுகோலான கிரீமிலேயரை கொல்லைப்புற வழியாக, மறைமுக ஏற்பாடாக புகுத்தியது என்றால், கறையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்த கதைதானே?

உச்ச நீதிமன்றத்தின் இந்த அநீதித் தீர்ப்பைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் நலிவுற்ற மேல்சாதியருக்கென 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளார் மோடி. ஒன்றரை விழுக்காட்டினரே உள்ள குறிப்பிட்ட மேல்சாதியருக்கான இந்த சட்டவிரோத 10% இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கான சட்டபூர்வ ஒதுக்கீடு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. மேலும், நீட் மூலம் தமிழர்கள் மருத்துவம் படிக்காதபடி செய்த மோடி, மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டையும் காலி செய்திருக்கிறார்.

ஆக மேல்படிப்புக்கான ஒதுக்கீடு ரத்தும் சரி; மேல்சாதியினருக்கான 10% ஒதுக்கீடும் சரி; கிரீமிலேயருக்குள் ஆடு, மாடு, பன்றி, நெல், கரும்பு மற்றும் இதர வேளாண் பொருட்களையும் வருமானமாக உள்ளடக்கும் மோடியின் கோணல் புத்தியும் சரி; சமூக நீதியை ஒழித்துக்கட்டும் வக்கிரத் திட்டமே அன்றி வேறில்லை. ஆகவே ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்வதோடு, இதனை எதிர்த்துப் போராடவும் தயாராக வேண்டும்.

இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு என்பதை பண்டித ஜவகர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போதே, அரசியல் நிர்ணய அவையில் நன்கு யோசித்து, விவாதித்து, பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண, சமூக ரீதியாக (Socially), கல்வி ரீதியாக (Educationally) என்ற சொற்களைப் போட்டுவைத்தனர்; பொருளாதார ரீதியாக (Economically) என்ற சொல்லைத் தவிர்த்தனர். காரணம், வருமானம் நிலையானதல்ல, ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. உத்தராகண்ட் மாநிலத்தின் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், “அரசுப் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளுக்கு கட்டாயம் இல்லை.

அதேபோல் அரசுப் பணி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் இடஒதுக்கீடு கோர எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என்று உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து, “பாஜக அரசு வந்ததிலிருந்து இடஒதுக்கீடு பாதிப்புக்குள்ளாகி வருகிறது” எனக் குரல் எழுப்பினர்.

இடஒதுக்கீட்டுக்கு உண்டான பாதிப்பைப் போக்க, “ஒன்றிய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்” என்று தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பினர். இதை வழிமொழியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இடஒதுக்கீட்டுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும் விதத்தில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நட்த்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.


Share this News: