வாட்ஸ்அப் நிபந்தனைகள் – அச்சம் கொள்ள என்ன இருக்கிறது?!

Share this News:

பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் விதிக்க உள்ளதாகவும் இதனால் பயனர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் பறிபோகுமெனவும் எனவே சிக்னல், டெலக்ராம் போன்ற வேறு செயலிகளுக்கு மாறுவது நல்லது எனவும் செய்திகள் பரவலாகப் பகிரப்படுகின்றன.

இந்த அளவுக்கு அச்சம் கொள்ள அதில் என்ன இருக்கிறது, நிஜமாகவே வேறு செயலிகளுக்கு மாறத்தான் வேண்டுமா என்பது குறித்து விவரமாக பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய நிபந்தனைகளின் மொத்த சாராம்சம் இதுதான். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட எல்லா விவரங்களையும் வாட்ஸ்அப் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். அதற்கு ஒப்புதல் வழங்குவோருக்கு மட்டுமே இனிமேல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலும்.

இதனைக் கேட்டவுடன் என்னமோ தலை போய்விடப் போவதுபோல் அச்சம் எழுவது இயல்புதான். ஆனால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் முதலான செயலிகள் ஏற்கெனவே அதன் பாவிப்பாளர்களின் தனிப்பட்ட விவரங்களை மொத்தமாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதான் உண்மை. இதுவரை திருட்டுத்தனமாக சொல்லாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தது. இனிமேல், பயனர்களிடம் சொல்லிக் கொண்டு செய்யப்போகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ஃபேஸ்புக் செயலியைப் போன்று வாட்ஸ் அப்பில் விளம்பரங்கள் வருவதில்லை. விளம்பரமே இல்லாமல் இயங்கும் வாட்ஸ்அப்பை பல மில்லியன்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி சொந்தமாக்கிக் கொண்டதன் காரணமே அதன் பயனர்களின் எண்ணிக்கைதான். அப்பயனர்களின் விவரங்களைச் சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம்தான் இதுபோன்ற இலவச செயலிகளின் நிறுவனங்கள் இயங்குகின்றன. இது, ஃபேஸ்புக்கிற்கு மட்டுமல்ல ஜிமெயில் முதலான எல்லா இலவச செயலிகளுக்கும் பொருந்தும்.

AI(Artificial Intelligence) தற்காலத்தில் உச்ச நிலையிலிருக்கும் தொழில்நுட்பம். கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே அவற்றுக்கான சொந்த AI அல்காரிதங்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றன. இது போன்ற செயலிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் இந்த அல்காரிதங்கள் உள்வாங்கி கொண்டு, அடுத்தமுறை அச்செயலிகளைப் பயன்படுத்தும்போது முந்தைய அவர்களின் செயல்பாடுகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்கும்.

உதாரணமாக,

ஜிமெயிலில் வந்த ஒரு மெயிலை ஸ்பேம் என தட்டிவிட்டால், அந்த முகவரியிலிருந்து மீண்டும் வரும் மெயில்கள் அத்தனையையும் ஸ்பேமுக்குக் கடத்திவிடும். மெயில் அனுப்புவதற்காக திறக்கும் பெட்டியில் தட்டச்சு செய்யும் முகவரி, மெஸேஜ் அத்தனையையும் உள்வாங்கி கொண்டு, அடுத்தமுறை மெயில் அனுப்பத் திறக்கும்போது நாம் தட்டச்ச ஆரம்பித்த உடனேயே முந்தையதை நினைவுறுத்தி சஜசன் கொடுக்கும். இச்சிறிய உதாரணத்திலிருந்து விண்டோசில் இயங்கும் cortana ஆப்பிளில் இயங்கும் siri வரை அனைத்துமே இந்த AI தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியவையே. இவை அனைத்துக்கும் மூலதனம் என்பது பயனர்களின் முந்தைய செயல்பாடுகளும் அவர்களின் தகவல்களும் தான். இக்காலத்தில் தகவல்தான் ராஜா. அதனை எந்த அளவுக்கு அதிகமாக ஒரு நிறுவனம் சேகரித்து கொள்கிறதோ அந்த அளவுக்கு அந்நிறுவனம் கொடிகட்டிப் பறக்கும்.

தம் பயனர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேகரிப்பது சட்டப்படி தவறு என்பது எல்லா நிறுவனங்களுக்கும் தெரியும். ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் இதற்காக சட்ட நடவடிக்கைகளுக்கு இரையாகியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விசயம். அமெரிக்காவில் இதுபோன்ற வழக்குகள் எதிர்கொண்டு தண்டனை அடைந்தால், நிறுவனத்தையே விற்று அபராதம் செலுத்தினால்கூட கட்டுப்படியாகாமல் திவாலாக வேண்டி வரும். இதனால், எல்லா நிறுவனங்களும் தம்மைச் சட்ட ரீதியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வாட்ஸ் அப்பின் புதிய அறிவிப்பு இதற்காகத்தான்.

அதாவது, இதுவரை சொல்லாமல் திருடி வந்ததை இப்போது நேரடியாக சொல்லியே எடுத்துக் கொள்ளப்போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக வாட்ஸ் அப்பை விட்டு வேறு செயலிகளுக்குச் சென்றால் தப்பித்துவிடலாம் என்ற நினைத்தால், அதனைவிட மடமை வேறொன்று இருக்க முடியாது.

இங்கே எதுவுமே இலவசம் இல்லை. இலவசமாக தரப்படும் ஒன்றின் பின்னால், நாம் எதையோ விலையாக கொடுக்கிறோம் என்பதே உண்மை. அது டெலக்ராமாக இருந்தாலும் சரி, சிக்னலாக இருந்தாலும் சரி, ஜூமாக இருந்தாலும்சரி!

இந்தச் சமூக ஊடகங்கள் என்றில்லை, இணைய இணைப்பு பயன்படுத்தி இணைய வலைக்குள் வந்துவிட்டாலேயே நம் இருப்பிடத்திலிருந்து நாம் பயன்படுத்தும் கணினி/மொபைல் குறித்த விவரங்கள் வரை அத்தனையையும் திறந்து வைத்துவிட்டோம் என்று பொருள். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியின் வடிவமைப்பாளரின் தரத்துக்கு ஏற்ப, நம் சொந்த விவரங்கள் கூடுதல் குறைவாக இணையத்திலிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில், புதிதாக பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

இவை எதுவும் தெரியாமல், தம் விவரம் எதுவுமே யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கையில் இச்செயலிகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் வாட்ஸ்அப்பின் புதிய அறிவிப்பு பயத்தைத் தரும்.

சரி. என் விவரங்களை யாருக்கும் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. எனில் என்ன செய்வது?

ஒரே பதில், இணைய இணைப்புக்குள் நுழையாமல் இருக்க வேண்டும். குறைந்தப்பட்சம், இலவசமாக கிடைக்கும் செயலிகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

அது நடக்கிற காரியமா என்ன? எனில், என்ன செய்வது?

தனிப்பட்ட செய்திகளை யாருக்கும் பகிராமல் இருக்க வேண்டியதுதான். இணையத்தில் உலா வரும்போது, ஆபாச தளங்களுக்குப் போகாமல், ஆபாச வீடியோக்கள் பார்க்காமல் இருக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது, உள்ளாடைகள் தொடர்பானதன் பக்கமே போய்விடக் கூடாது. தனிப்பட்ட செய்தியாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களில் பதிவாகப் போடுவதாக இருந்தாலும் சரி.. அரசியல் தொடர்பானவற்றில் வார்த்தைகளைக் கவனமாக பயன்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் பேணி இச்செயலிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், கூடுதல் வசதிகள் தரும் எந்தச் செயலியை வேண்டுமானாலும் தைரியமாக பயன்படுத்தலாம்!


Share this News:

Leave a Reply