மோசடி வழக்கில் டி.வி. தொகுப்பாளினி கைது!

ஜூலை 25, 2018 772
அனீஷா அனீஷா

சென்னை (25 ஜூலை 2018): பண மோசடி வழக்கில் டி.வி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப் பட்டுள்ளார்.

அனிஷா என்கிற பூர்ணிமா தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். 2008ம் ஆண்டு நடந்த சின்னத்திரை அழகிப்போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த அனிஷா, சக்தி முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அனிஷா, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வந்தார்.

இந்நிலையில் கேகே நகரை சேர்ந்த ஏசி டீலரான பிரசாந்தை சந்தித்த சக்தி முருகன், கிண்டியில் புதிதாக திறக்கவுள்ள தன்னுடைய ஹோட்டலுக்கு 103 ஏசி தேவை என கூறியுள்ளார். அதற்காக 37 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் சக்தி முருகன் பிரசாந்திடம் கொடுத்துள்ளார்.

ஆடி, ஜாகுவார் என விலை உயர்ந்த காரில் வந்து இறங்கிய சக்தி முருகனை தொழிலதிபர் என நம்பி அவர் கேட்ட 37 லட்சம் மதிப்பிலான ஏசி்யை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். ஆனால் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது. இதுகுறித்து சக்தி முருகனிடம் கேட்டதற்கு பணம் தருவதாக அலைக்கழித்துள்ளார். மேலும் தன்னிடம் வாங்கிய ஏசிகளை இணையதளம் மூலம் விற்றதை கண்டுபிடித்த பிரசாந்த், இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஸ்கை டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி முருகன், கார்களை தங்கள் நிறுவனம் மூலம் இணைத்து கொள்பவர்களுக்கு அதிக வாடகை தருவதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதை நம்பி ஜாகுவார், ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை சிலர் வாடகைக்கு கொடுத்துள்ளனர். இந்த கார்களையும் சக்தி முருகன் விற்றுள்ளார். வாடகைக்கு எடுத்த காரை அதிகபட்சமாக 64 லட்ச ரூபாய் வரை விற்றுள்ளார். கார் மோசடி குறித்து எம்.ஜி. ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, சக்தி முருகன் தலைமறைவானார். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் சக்தி முருகனை தேடி வருகின்றனர். சக்திமுருகனின் கூட்டாளியான ரமேஷை எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்

மோசடிகளில் தொடர்புடைய சக்தி முருகனின் மனைவி அனிஷாவையும், அவரது சகோதரர் ஹரிகுமாரையும் கே.கே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...