ஜெயலலிதாவை அவமானப் படுத்தும் பிக்பாஸ் - கமலுக்கு எதிராக புகார்!

ஆகஸ்ட் 02, 2018 696

சென்னை (02 ஆக 2018): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும், கமலுக்கு எதிராகவும் வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில் வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், "நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறேன். நான் பல்வேறு சமூக, சமுதாயப் பணிகளையும் செய்துவருகிறேன். தமிழகத்தில் சமீப காலமாக புதுப்புது அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி கட்சி ஆரம்பிப்பவர்கள், தாங்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். ஆனால், அதைவிட்டு முந்தைய ஆட்சியாளர்களை கேவலமாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். அதை தடுக்க வேண்டும். விஜய் டிவியில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. ஒரு வாரம் நடந்த நிகழ்வை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். அவர் சில சமயம் தன் மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்கும் பேச்சுகளைப் பேசுகிறார். இது அவரது கட்சியை கொண்டு சேர்க்க கையில் எடுத்துள்ள யுத்தி. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவருகிறார். நிகழ்ச்சியில் சர்வாதிகாரி என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா டிக்டேடராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றவர்களை கொடுமைப்படுத்தும் செயல்களை ஐஸ்வர்யா செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் என்ன செய்ய வேண்டும் என்ன பேச வேண்டும் என்று எண்டேமோல் நிறுவனமும், நடிகர் கமல்ஹாசனும் கூறுகின்றனர். அதைத்தான் இவர்கள் நடித்துக் காட்டுகின்றனர். ஜூலை 31ம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர் ரித்விகா, வடநாட்டில் இருந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகார ஆட்சி செய்தவர்கள் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியாது எனக் கூறினார். அதே போல் சனிக்கிழமை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போதும் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல் பேசினார்.

எனவே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...