டெம்ப்ளர்களின் முயற்சி, தோல்வியில்..! – எர்துருல் தொடர் -8: வீடியோ!

696

அலெப்போவிலிருந்து எர்துருல் வெற்றியுடன் திரும்பியதைக் கோத்திர வழக்கப்படி கொண்டாடுவதற்காக காயி கோத்திரம் முழுமையும் ஒன்று கூடியுள்ளது. கொண்டாட்டத்தினிடையே எர்துருலைக் கவருவதற்காக தம் தங்கை கோக்சேவை செல்சன் அலங்கரிக்கிறார். அனைவரும் கொண்டாட்டத்தில் மதிமறந்திருக்கும் வேளையில், கோத்திரத்தினுள் நோய்ப் பரப்புவதற்கான முயற்சியில் தயாராகின்றனர், டெம்ப்ளர்கள் அனுப்பிய தொழுநோயாளிகள் தயாராகின்றனர்.

கொண்டாட்டத்தினிடையே எர்துருலின் பார்வை முழுக்க ஹலிமாவிடம் இருப்பதைக் காணும் கோக்சே வருத்தத்துடன் எழுந்து செல்கிறாள். இதனால் கோபம் கொள்ளும் செல்சன், ஹலீமா-விடம் சென்று இனியும் எங்கள் கூடாரத்தில் தங்குவதற்கு வெட்கமாக இல்லையா என இகழ்கிறாள். இதனால் மனம் நொந்து அங்கிருந்துக் கிளம்பும் ஹலீமா-வை எர்துருல் இடைமறித்து என்னவென விசாரிக்கிறார். தம்மால் இனிமேலும் உங்களிடையே தொடரமுடியாது, தம்மால் உங்கள் கோத்திரத்துக்கு மேலும் துன்பம் வரும்; எங்களை அவர்கள் விடமாட்டார்கள் எனக் கூறும் ஹலீமா-விடம் யாரைப் பார்த்து பயம் கொள்கிறீர்கள் என கேட்கிறார் எர்துருல். இவ்வேளையில், டெம்ப்ளர்கள் அனுப்பிய தொழுநோயாளிகளில் ஒருத்தி கோத்திரத்தினரிடம் பிடிபட்டு விடுகிறாள். அவளைக் கொல்லும்படி மக்கள் கூப்பாடு போடுகின்றனர்.

டெம்ப்ளர்களின் தொடர் முயற்சி, அலெப்போவில் எர்துருலைக் கொல்ல முயற்சி ஆகியவற்றால் குழம்பும் சுலைமான் ஷா என்ன நடக்கிறது என எர்துருலை அழைத்து விசாரிக்கிறார். எர்துருல் பாதுகாத்து அழைத்து வந்தவர்களின் பின்னால் ஏதோ பெரும் சதிவலை பின்னப்படுவது அவர்களுக்குப் புரிகிறது. அவர்கள் யார் என்ற விவரம் தெரியாததால் குழம்புகின்றனர். எர்துருலுக்கு கோக்சேவைத் திருமணம் செய்விக்க முடிவெடுத்துள்ள விவரத்தையும் சுலைமான் ஷா தெரிவிக்கிறார்.

டெம்ப்ளர்கள் அனுப்பிய தொழுநோயாளிகளில் ஒருத்தி பிடிபட்டாலும் மற்றொருத்தி , ஆடுகள் குடிக்கப் பயன்படுத்தும் தொட்டியில் நோய் பரப்பும் கிருமிகளைக் கலந்துவிடுகிறாள்.

தந்தை தம்மிடம் தெரிவித்த திருமண விவரம் குறித்து தாய் ஹேமிடம் கூறி, தம் மனத்தில் ஹலீமா-வின் மீதிருக்கும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் எர்துருல். அன்னை ஹேம் தம் கணவர் சுலைமான் ஷாவிடம் சென்று, விவரம் கூறுகிறார். ஆனால், வந்தவர்கள் யாரென நமக்குத் தெரியாது; விருந்தினர்கள் எப்போதென்றாலும் சென்றுதான் ஆக வேண்டும். கோத்திர வழக்கப்படி ஒரு ஆல்ப் தம் கோத்திரத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே, புதிய இடம் இது. அலெப்போவுக்குக் குடிபெயர்ந்த பின்னர், போகப் போக எல்லாம் சரியாகிவிடும். எர்துருல் கோக்சேவைத் திருமணம் செய்வார் என சுலைமான் ஷா கூறிவிடுகிறார்.

அடுத்தநாள் காலை அனைவரும் இணைந்து உணவருந்த நடக்கும் ஏற்பாட்டினிடையே, தம் மனத்திலுள்ளதைக் கோக்சேவிடம் தெரிவித்துவிட எர்துருல் முனைகிறார். அவர் சொல்ல வருவது எது என்பது தெரியுமென்பதால், உணவருந்தும் வேளையிலும் அவர் திருமணப் பேச்சை எடுக்கும்போதே, கோக்சே அப்பேச்சைத் தொடரவிடாமல் செய்துவிடுகிறாள்.

இந்நேரம் கரடோய்கரிடமிருந்து செய்தியுடன் ஹம்ஸா வருகிறார். வியாபார கேரவன் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட விவரமும் தம் மகன் குண்டோக்டுவை கரடோய்கர் சிறைபடுத்தியுள்ள விவரமும் அறிந்து அதிர்ச்சியடைகிறார் சுலைமான் ஷா. அவரை விடுவிக்கப் பகரமாக தம் கோத்திரம் பாதுகாக்கும் நுஃமானையும் அவர் மகனையும் ஒப்படைக்க கரடோய்கர் நிபந்தனை வைக்கின்றார். அதனைக் கேட்டு ஆச்சரியமடையும் அவர், உடனடியாக நுஃமானை அழைத்து வரச் சொல்கிறார். கேரவன் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் கோத்திரத்தில் எவருக்கும் தற்போதைக்குத் தெரியவேண்டாமெனக் கூறும் அவர், ஹம்ஸாவை யாருக்கும் தெரியாமல் மறைவாக வைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிடுகிறார்.

ஹலீமா-வின் கூடாரத்தில் அனுமதி கேட்காமலே நுழைந்து நுஃமான் அழைக்கப்படுவதாக சொல்வதைக் கேட்டு, ஏதோ பிரச்சனை என உணர்கின்றனர். இதனிடையே, தம் கணவர் சிறை பிடிக்கப்பட்டதைக் கேட்டு ஆத்திரம் கொள்ளும் செல்சன், ஹலீமா-வின் கூடாரத்தினுள் ஆவேசத்துடன் நுழைந்து தம் கணவருக்கு ஏதேனும் ஆனால் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். அன்னை ஹேம் வந்து அவர்களைச் சமாதானப்படுத்தி, நடந்த விஷயத்தை ஹலீமா-விடம் தெரிவிக்கிறார். இவற்றைக் காணும் அஃப்சின், ஹலிமாவிடம் வந்து விவரம் கேட்டறிந்து அவர்களைக் கூடாரத்தைவிட்டு வெளியே வரவேண்டாமெனக் கூறி செல்கிறார்.

நுஃமானிடம் விவரம்கூறி, இந்த அளவுக்கு நீங்கள் முக்கியத்துவம் உள்ளவர் எனில் உங்கள் பின்னால் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். நீங்கள் யார் எனக் கேட்கிறார். வேறு வழியில்லாமல், தாம் யார் என்ற விவரத்தை நுஃமான் தெரிவிக்கிறார். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். கோத்திரம் பஞ்சத்திலும் பசியிலும் வாடும் வேளை, இருந்த ஒரே எதிர்பார்ப்பான அவர்களின் தயாரிப்புகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்ட நிலையில் அதனை மீட்டேயாக வேண்டிய கட்டாயத்திலும் தம் மகனை உயிருடம் மீட்டாக வேண்டும்; அதே சமயம், தம் கோத்திர வழக்கப்படி அடைக்கலம் கொடுக்கப்பட்டவர்களையும் பாதுகாத்தாக வேண்டிய இக்கட்டான சூழலில்தள்ளப்படுகிறார், சுலைமான் ஷா !

அந்த இக்கட்டான நிலைமையை எவ்வாறு சமாளிக்ப் போகின்றார் அவர்..? அடுத்த தொடரில்..!

எர்துருல் சீசன் 1 தொடர் 7எர்துருல் சீசன் 1 தொடர் 9