காட் ஃபாதர் (குறும்படம்)

அக்டோபர் 04, 2015 2908

கன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா? கேபிள் சங்கர் வழங்கும் The God Father என்ற தமிழ் குறும்படம் அப்படியான ஓர் ஆக்கம்.

தன்னலம் பிரதானமாகிவிட்ட இக் காலத்தில், பாசம் என்பது நிறம் மாறி கடமையும் பொறுப்பும் பாரமாகிவிட்டன. அவற்றை வெகு யதார்த்தமாய் மென்மையாய் ஆனால் அழுத்தமாய்ச் சொல்கிறது காட் ஃபாதர்.

வயதான தந்தையை முதியோர் இல்லத்திற்கு காரில் அழைத்து வருகிறான் மகன். பல வசதிகளும் அமைந்திருக்கும்படியான அறையை ஏற்பாடு செய்கிறான். அதிகப்படியான செலவு எதற்கு என்று மறுக்கும் தந்தையை அன்பாக, “இருக்கட்டும் அப்பா” என்று சமாதானப்படுத்துகிறான்.

காரிலிருந்து அவருடைய சாமான்களை இறக்குவதற்குள் மனைவியிடமிருந்து ஃபோன். பண்டிகைக் காலங்களில் அதை ஒரு சாக்காக வைத்து தன் மாமனார் வீட்டிற்கு வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம்தான் அவளது தேன் குழைத்த வார்த்தைகளில் வடிகிறது. அதெல்லாம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு சாமான்களுடன் கேட்டை அடைகிறான் மகன். அங்கு எதிர்பாராத ஒரு சின்ன ட்விஸ்ட்டுடன் முடிகிறது படம்.

ஆறரை நிமிடமே ஓடும் இப்படத்தில் ஓரிரு வரிகளில் அமையும் இறுதி வசனத்தில் அத்தனை மெஸேஜையும் சொல்லிவிடுகிறார் ப்ரஜீஷ் திவாகரன்.

வாட்ஸ் அப் தலைமுறை ஒருமுறை பார்த்து வைக்கலாம். குடி முழுகாது.

- நூருத்தீன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...