சிரியா பிரச்னை ஒரு ஆய்வு நோக்கு!

February 28, 2018

ரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகவும் கோரமான யுத்தம் நடக்கும் சிரியா மீண்டும் தலைப்பு செய்திகளில் வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

கிழக்கு ஃகூத்தா (East Ghouta) வில் மீண்டும் சிரிய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட Operation Damascus Steal இராணுவ நடவடிக்கை காரணமான மனித பேரவலங்கள், உலகத்தின் கவனத்தை மீண்டுமொரு முறை சிரியா பக்கம் திருப்பியிருக்கிறது.

கிழக்கு ஃகூத்தாவின் அமைவிடம்

கிழக்கு ஃகூத்தா என்பது சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கு மிக அருகில்  இருக்கும் புறநகர் பகுதியின் பெயர். இதற்குள் பத்து நகரங்கள் உள்ளடங்குகின்றன. எனினும் Douma எனப்படும் நகரமே பெரிய நகராகும். டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் கூட ஃகூத்தாவுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

கிழக்கு ஃகூத்தா சிரியா புரட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் கழிந்த பின்னர் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அன்றிலிருந்து கடந்த ஆறு வருடங்களாக சிரியா இராணுவத்தின் முற்றுகைக்குள் இருந்தாலும் தொடர்ச்சியாக போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது.

கிழக்கு ஃகூத்தாவில் இயங்கும் போராளி ஆயுத குழுக்களும் உள்முரண்பாடுகளும்.

ஜாயிஸ் அல் இஸ்லாம் (JAI) எனப்படும் போராளி குழுவே இந்த பகுதியில் சிரியா அரச படைகளுக்கு எதிராக இயங்கும் மிகப்பலமான ஆயுத கிளர்ச்சி குழுவாகும். JAI சிரியாவில் வேறு எந்தபகுதியில் இயங்குவதும் இல்லை. இந்த போராளி குழுவை உருவாக்கிய சஹ்றான் அல்லூஷ் 2015 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை ஃகூத்தா ஜாயிஸ் அல் இஸ்லாத்தின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக பைலைக் அர் ரஹ்மான் (FAR) எனும் மற்றுமொரு ஆயுத போராளி குழு பலமான இரண்டாம் நிலையில் இந்த பகுதியில் இயங்குகிறது. இதற்கு மேலதிகமாக அஹ்றார் அஷ் ஷாம் மற்றும் அல் காயிதாவின் ஹயாத் தஹ்ரீர் ஷாமும் (HTS) இந்த பகுதியில் இயங்கும் ஆயுத குழுக்களாகும்.

முற்றுகைக்குள் இருந்தாலும் பலமான முன்னரங்குகளால் பாதுகாக்கப்பட்ட கிழக்கு ஃகூத்தா அல்லூஷின் மறைவின் பின்னர் போராளி குழுக்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளால் பலமிலக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒவ்வொரு வருடம் எதோ ஒரு காலத்தில் ஏதாவது இரண்டு குழுக்களுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிப்பதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முடியுமான அளவு ஒரு பகுதியை சிரியா இராணுவம் கைப்பற்றுவதுமாக தொடர்ந்து வந்தது.

முற்றுகைக்குள் இருக்கும் வெவ்வேறு நகரங்களையும் , முன்னரங்கு காவல் நிலையங்களை வெவ்வேறு போராளி குழுக்களின் கட்டுப்பாடில் இருந்து வந்தாலும் பெரும் பகுதி இன்று வரை ஜாயிஸ் அல் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. நல்லநேரம் ஃகூத்தாவில் ஐஸ்ஐஸ் இயங்கியிருக்கவில்லை. இல்லை என்றால் ஹாமா மற்றும் தென் இத்லிபில் நடந்ததை போல இந்நேரம் முற்றுமுழு ஃகூத்தாவும் சிரியா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்.

ஏன் கிழக்கு ஃகூத்தா இலக்கு வைக்கப்பட்டது.

ஆறு வருடங்களாக தொடரும் சிரியா யுத்தத்தில் தற்போதைய நிலவரம் சிரியா இராணுவத்திற்கு வாய்பாகவே இருக்கிறது. துருக்கிய எல்லையில் இருக்கும் இத்லீப் மற்றும் ஜோர்தான் எல்லையுடன் இருக்கும் தர்ரா தவிர்ந்த சிரியா மத்தியில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இரண்டே இரண்டு பகுதிகள்தான் எஞ்சியிருக்கின்றன. ஒன்று ஹோம்ஸ் நகருக்கு வடக்கில் இருக்கும் ஒரு பகுதி. அது போர் நிறுத்த உடன்படிக்கையில் இருக்கிறது.

மற்றையது தற்போது பிரச்சினையாகியிருக்கும் கிழக்கு ஃகூத்தா. நெருங்கிய கட்டிடங்களின் கீழ் நிலக்கீழ் சுரங்கப்பாதைகளை (underground tunnel) கொண்டு அமைக்கப்பட்ட பலமான முன்னரங்குகளுடன் போராளிகள் இருப்பதால், East Ghouta is a tough nut to crack. அதன் காரணமாகவே பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய ஒரு களமாக இனங்காணப்பட்டு , ஏனைய பல பகுதிகள் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை பொறுமையாக இருந்து.

அது சாத்தியமாகியதன் பின்னர் இறுதி களமாக தற்போது ஃகூத்தாவை கைப்பற்றுவதற்காக முடிவை சிரியா அரசு எடுத்திருக்கிறது.
அதேநேரம் முழு டமாஸ்கஸ் நகரமும் போராளிகளின் செல் வீச்சு இல்லைக்குள் இருப்பதால், ஃகூத்தாவை என்ன விலை கொடுத்தேனும் கைப்பற்றிவிட்டால் , தலைநகர் பாதுகாப்பாக மாறும் அதேநேரம் துருக்கிய ஜோர்தானின் எல்லைப்பகுதிகள் தவிர்ந்த மத்திய சிரியாவின் ஏனைய அனைத்து பகுதிகளும் தமது கட்டுப்பாடுக்குள் வந்துவிடும்.

அப்படியான ஒரு நிலையில் இந்த வருடம் (2018) இறுதிக்குள் யுத்தத்தை முடித்துவிட்டோம் என்று அறிவிப்பதற்கு ரஷ்யா மற்றும் சிரியா அரசுகள் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிகின்றனது. ஆனால் அதற்காக கொடுக்கப்படும் விலை பல ஆயிரம் அப்பாவிகளின் உயிர்கள் என்பது மட்டும் இப்போதே உறுதியானது.

பிரச்சார யுத்தம்

சிரியா யுத்தம் என்பது உள்நாட்டு மோதல் என்று அழைக்கப்பட்டாலும் அது உண்மையல்ல. சிரியா யுத்தம் சர்வதேச பிராந்திய நாடுகளின் பலப்பரீட்சை களம் என்பதே உண்மையாகும். பொதுமக்கள் மதம், மொழி, இன ரீதியாக பிரிக்கப்பட்டு மோதலுக்கு உந்தப்பட்டிருந்தாலும் என்ன விலை கொடுத்தேனும் தமது பூகோள அரசியல் நகர்வை கொண்டு நடத்தவேண்டும் என்பதற்காக சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும் அவர்களின் வெவ்வேறு அஜெண்டாவுக்கு அமைவாகவே பிஞ்சு குழந்தைகள் உட்பட பல லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் குருதிகள் ஒட்டப்படுகிறது என்பதே கசப்பான உண்மையாகும்.

சிரியா யுத்தத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அப்பாவி மொதுமக்கள் ஏதாவது ஒரு தரப்பினால் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சிரியா யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் கைகளிலும் அப்பாவி பொதுமக்களின் குருதி படிந்திருக்கிறது. எனினும் நாம் யாருக்காக எப்போது அழனும் என்பதையும் அதே ஏகாதிபத்திய வல்லரசுகளே தீர்மானிக்கிறார்கள் என்பதை உணரும் போது அருவருப்பாக இருக்கிறது.

போர்நிறுத்தம்

கிழக்கு ஃகூத்தாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாயிஸ் அல் இஸ்லாம் அமைப்பு போர் நிருத்தத்திற்குள் வரமாட்டார்கள் ஆகவே அவர்கள் எங்களுக்குரிய Legitimate target என்று ரஷ்யாவும் , ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் மக்கள் வெளியேறுவதற்கான மனிதாபிமான இடைவெளி என்று சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்து இருந்தாலும் மக்கள் வெளியேறுவதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன.

1. தாம் வெளியேறும் போது சிரியா இராணுவத்தால் பலி வாங்கப்படுவோம் என்ற அச்சத்தில் பல இருக்கிறார்கள்.

2. சிலர் வெளியேற விரும்பினாலும் தாம் தனித்துவிடப்படுவோம் என்று போராளிகள் வெளியேற அனுமதிக்க போவதும் இல்லை.
ஆகவே இந்த போர் நிறுத்தம் எப்படியும் வெற்றியளிக்க போவதும் இல்லை, அப்பாவி சிரியா பொதுமக்களின் அவலங்களும் இலகுவில் தீர்ந்து விடப்போவதும் இல்லை.

- Dilshan Mohamed

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!