சிரிய அரசியல்: ஐ.நா தீர்மானம் குப்பையில்!

மார்ச் 01, 2018 1178

30 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தி வைக்கும் தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றிய சில மணித் துளிகளிலேயே, போராளிகள் கைவசமுள்ள சிரியாவின் மேற்குபகுதி கௌடாவினுள் சிரிய மற்றும் ரஷ்ய துருப்புகள் வான் மற்றும் தரை வழி முன்னேற்றங்களை ஆரம்பித்துள்ளன.

சிரியாவின் மேற்கு பகுதியிலுள்ள இட்லிப் மற்றும் கௌடா பிரதேசங்கள் சிரிய எதிர் தரப்பு போராளி குழுக்களின் வசம் உள்ளன. இதில் கௌடா பிரதேசம் நுஸ்ரா ஃப்ரண்ட் என முன்னர் அறியப்பட்டிருந்த ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் மற்றும் ஃப்ரீ சிரியன் ஆர்மி, ஜெய்ஷ் அல் இஸ்லாம் முதலான பல போராளி குழுக்களின் வசம் உள்ளது.

இப்பிரதேசத்தில் சிரிய இராணுவம் நுழைய முயற்சி செய்ததைத் தொடர்ந்து, சிரிய இராணுவத்தினர் சிலரை ஃப்ரீ சிரியன் ஆர்மி பிடித்து கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பெப்ருவரி 18 ஆம் தேதி, இப்பிரதேசத்தின் மீது வான்வழி தாக்குதலை ரஷ்ய, சிரிய படைகள் மேற்கொண்டன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 500 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் ஆரம்பித்த உடனேயே இதனை நிறுத்துவதற்கான முயற்சிகளை சிரியாவுக்கான ஐ.நா மனித உரிமை கழகம் ஆரம்பித்தது. குவைத் மற்றும் ஸ்வீடன் இணைந்து ஐ.நாவில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்தன. இது தொடர்பான ஓட்டெடுப்பு கடந்த வெள்ளியன்று நடக்க இருந்த நிலையில், தீர்மானத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர ரஷ்யா நிர்பந்தித்ததைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று, ஞாயிற்று கிழமை 30 நாட்களுக்கான போர் நிறுத்த தீர்மானம் ஐ.நாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இத்தீர்மானம் கொண்டுவரப்பட்ட சில மணித் துளிகளிலேயே கௌடா பிரதேசத்தினுள் ரஷ்ய மற்றும் சிரிய படைகள் வான் மற்றும் தரை வழியாக உள்ளே நுழைந்துள்ளன.

இப்படையில் அங்கம் வகிக்கும் ஈரான் ஆயுதப்படையின் தலைவர் முஹம்மது பக்ரி கூறும்போது, ஐநாவின் தீர்மானத்தை மதிக்கிறோம்; ஆனால் அது தீவிரவாதிகள் மீதான தாக்குதலைக் கட்டுபடுத்தாது. ஹயாத்தே தஹ்ரீர் அல் ஷாம் முதலான தீவிரவாதக் குழுவின் மீதான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சிரிய இராணுவத்தின் தரப்பில் பின் ஜாவித் கூறும்போது, தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளே எங்களின் முக்கிய டார்கெட்கள். தீவிரவாதிகளின் கைகளிலிருந்து கௌடாவை மீட்பதன் முக்கிய கட்டம் இது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இப்பிரதேசத்தில் சிரிய அரசு தடை செய்யப்பட்ட வாயு குண்டுகளைப் பிரயோகித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரிய அரசின் தீயணைப்பு படையான வெள்ளை ஹெல்மெட், விஷ வாயு தாக்கி குழந்தை ஒன்று இறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விஷ வாயுவைப் போராளிகள் தரப்பே பயன்படுத்தியுள்ளது என்றும் அரசு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஒரு வார காலத்தில் நடந்த தாக்குதலினால், 40 சதவீதத்துக்கு அதிகமான மருத்துவ உதவி முற்றும் அழிந்துள்ளதாக சிரியாவுக்கான ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் மருத்துவ பிரிவு கூறியுள்ளது.

உணவும் மருத்துவமும் கௌடா பிரதேசத்தின் உடனடி தேவை. அது சரியான முறையில் கிடைக்கவில்லையேல், அடுத்து வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...