சிரியா : மக்கள் எழுச்சியும் ஆயுதப் போரும்

மார்ச் 02, 2018 1505

மார்ச் 15, 2018 ஆம் தேதி சிரியா பிரச்சினை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதுவரை அந்நாட்டின் பல்வேறு இடங்களிலும் கொல்லப்பட்டோரின் அதிகாரப்பூர்வமான  எண்ணிக்கை 4,65,000 க்கும் அதிகம். பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான (சுமார் 1 கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான) மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

21ஆம் நூற்றாண்டின் பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ள சிரியா பிரச்சினை தொடக்கம் முதல் அது கடந்து வந்த பாதை சுருக்கமாக இங்கே:

மக்கள் எழுச்சிக்கான காரணம் என்ன?

கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள், வேலைவாய்ப்பு மற்றும் மோசமான பொருளாதாரம் உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடியோரை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்கியது மக்களுக்கு அரசுக்கு எதிரான கோபத்தை ஏற்படுத்தியது.

2010ஆம் ஆண்டு ஆப்பிரிக்க அரபு நாடான துனீசியாவில் மல்லிகைப் புரட்சிக்கு வித்திட்ட நிகழ்வான முஹம்மது பூஅஜீஸி என்பவர் தம்மைத் தீயிட்டுத் தன்னழிப்புச் செய்ததைப் போன்று 2011 ஜனவரி 26ஆம் நாள் குர்திய நகரான அல் ஹஸகாவில் ஹசன் அலி அக்லேஹ் என்பவர் தம்மைத் தாமே தீயிட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

தொடர்ந்து எகிப்து மற்றும் லிபிய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அந்தந்த நாடுகளில் நடந்துகொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கு ஆதரவான பேரணிகள் சிரியாவிலும் நடந்தேறின.

எகிப்து மக்களின் அமைதியான போராட்டங்களால் இனியும் பதவியில் நீடிக்க முடியாது என்றுணர்ந்த ஹோஸ்னி முபாரக் சுமார் முப்பது ஆண்டுகள் அதிபர் பதவியைத் துறந்தார். என்றாலும் முழுமையான மாற்றம் வேண்டும் என்று மக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்ததன் விளைவாக மார்ச் 3ஆம் நாள் எகிப்தின் பிரதமர் அஹ்மது ஷஃபீக்கும் பதவி விலகினார்.

தொடர்ந்து சிறு சிறு ஆர்ப்பாடங்கள் நடந்து வந்தாலும் எகிப்து புரட்சியின் வெற்றி உற்சாகம் தந்தது. நாட்டின் பலபாகங்களிலும் சுவரில் அரபுப் புரட்சிக்கு ஆதரவாகச் சித்திரம் தீட்டியோர் எனக்கூறி 15 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் மாண்டு போனார்.

மார்ச் 15ஆம் தேதியை Day of Rage - கோப நாளாக அறிவித்து அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம் கோரி டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் மாபெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. டமாஸ்கஸ் பேரணியில் வன்முறையைக் கட்டவிழ்த்துக் களைத்தது அரசு. அதேநாளில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பேரணிகள் நடைபெற்றன.

கைது செய்யப்பட்டோரை விடுவிக்கக் கோரி மார்ச் 16ஆம் நாள் டமாஸ்கஸில் உள்துறை அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள் மற்றும் கைது செய்யப்பட்டோரின் குடும்பத்தினர் நடத்திய அந்த ஆர்ப்பாட்டத்தையும் சிரிய அரசு கடுமையாக ஒடுக்கியது.

தொடர்ந்து நாடுமுழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதும் அரசு அவற்றை ஒடுக்குவதுமாக இருந்த நிலையில், காலித் பின் வலீதின் பேரர்கள் என்ற பெயரில் ஜூலை மாதம் 22ஆம் நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஹமா நகரில் சுமார் 6 இலட்சம் பேரும் தெய்ர் அஸ்ஸூர் நகரில் சுமார் 4.5 இலட்சம் பேரும் கலந்து கொண்டனர்.

ஜூலை 29ஆம் நாள் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிரிய இராணுவத்தில் கலோனாகப் பணியாற்றிய ரியாத் அல் அஸ்அத் என்பவர் தாம் இராணுவத்திலிருந்து தம்முடைய ஆதரவாளர்களுடன் விலகிவிட்டதாகவும் இராணுவத்திலிருந்து வெளியேறி மேலும் சிலரும் இணைந்து Free Syrian Army சிரிய விடுதலை இராணுவத்தை அமைத்திருப்பதாகவும் அறிவித்தார்.

போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் ஒற்றை அரசியல் கட்சிக்கு மட்டுமே இருந்த அனுமதிக்கு மாறாக, புதிய அரசியல் கட்சிகளைத் தொடங்க வகை செய்தும் புதிய தேர்தல் விதிமுறைகளையும் பிறப்பித்து ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டார். அசத் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் போராடியோர் அசதின் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசுக்கு எதிரான போராட்டங்கள் இனக்குழுக்களின் அடிப்படையில் இல்லாமல் குர்துகள், அரபுகள் என பொதுவான போராட்டமாகவே அமைந்திருந்த நிலையில், ஆயுதப் போராட்டம் ஷியா - சன்னி - குர்து இனக்குழுக்களுக்கிடையேயான சண்டையாக மாறியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...