சிரியா: தொடரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674 ஆக உயர்வு!

மார்ச் 04, 2018 1488

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகிலுள்ள கௌடா நகரின் மீது ரஷ்ய - சிரிய கூட்டு இராணுவப்படை நடத்தும் தொடர் தாக்குதலில் மரண எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளை ஹெல்மெட் எனப்படும் சிவில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட தகவல்படி கடந்த 18 நாட்களாக தொடரும் தாக்குதலில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதில் 4000 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய அமைப்பு வெள்ளை ஹெல்மெட் எனப்படும் சிரிய சிவில் பாதுகாப்பு அமைப்பு. சிரியாவில் போர் நிறுத்த தீர்மானம் ஐநாவால் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மட்டுமே இதுவரை 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் 23 பேர் குழந்தைகள் எனவும் 40 பேர் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தினசரி 5 மணி நேர தாக்குதல் நிறுத்த அறிவிப்பினால் எந்தப் பயனும் இல்லை. இதுவரை ஒரு நிவாரண உதவியும் கௌடாவினுள் வரவில்லை. பொதுமக்கள் எவரும் வெளியேறுவதற்கான வசதியும் செய்யப்படவில்லை. பாதுகாப்பு குழிகளுக்குள் பதுங்குபவர்களுக்கு அங்கு முறையான கழிவறை வசதியோ, உடையோ, உணவோ இல்லை. சில பதுங்கு குழிகளின் அருகிலும் நடத்தப்பட்ட தாக்குதலில் எண்ணற்றோர் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவ முதலுதவி செய்வதற்கான வழியும் இல்லை. கௌடா இதுவரை கண்டதிலேயே மிக மோசமான நிலைக்கு அங்குள்ள மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ரஷிய - சிரிய கூட்டு விமானப்படை, போராளிகளின் மறைவிடத்தின் மீது தாக்குதவதாக நினைத்து கொண்டு, பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது கண்மூடித்தனமாக வான்வழி தாக்குதலை மேற்கொள்கிறது. போராளிகளிடமிருந்து கௌடாவைத் திரும்பக் கைப்பற்றும் ஒரே எண்ணத்துடன், பொது மக்கள் பாதிப்பைக் குறித்த எவ்வித கவலையும் இன்றி தாக்குதலில் சிரியா முழு மூச்சாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கௌடாவில் சுமார் 400,000 மக்கள் வசிக்கின்றனர் என்பதும் இதுவே போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகருக்கு அருகிலுள்ள மிக முக்கியமான பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், போராளிகளின் முன்னேற்றத்தை முழுமையாக முறியடித்துவிடலாம் என சிரிய அரசு கணக்கு போடுவதாலேயே இந்தக் கடுமையான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் தொடர்ந்தால், மிகவிரைவிலேயே இப்பிரதேசம் சிரிய அரசின் கட்டுப்பாட்டில் வரும். ஆனால், பல ஆயிரக்கணக்கான உயிர் அழிவும் நகர கட்டுமானத்தின் சீரழிவும் ஒருங்கே நடக்கும்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...