அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் தீ விபத்து!

ஏப்ரல் 08, 2018 563

நியூயார்க் (08 ஏப் 2018): அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் நியூயார்க்கில் மேன் காட்டன் மிட்டவுன் பகுதியில் உள்ளது. ‘டிரம்ப் டவர்’ என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டிடம் 664 அடி (202 மீட்டர்) உயரம் கொண்டது. இக்கட்டிடத்தில் டிரம்ப் நிறுவனங்களின் தலைமை அலுவலக கட்டிடம், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. டிரம்பின் சொகுசு மாளிகை, அவரது மகன், மகளின் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் இக்கட்டிடத்தின் 50-வது மாடியில் நேற்று மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு) திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்து ‘குபுகுபு’ வென கரும்புகை வெளியேறியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். முன்னதாக கட்டிடத்தில் தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து நடந்த 50-வது மாடியில் 67 வயது முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் நியூயார்க்கில் உள்ள மவுண்ட்னாய் ரூஸ்வெல்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு படை வீரர்களும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...