வரலாற்றில் எழுதப் பட வேண்டிய நாள் இன்று!

ஏப்ரல் 27, 2018 696

சியோல் (27 ஏப் 2018): வடகொரிய தென் கொரிய அதிபர்கள் 65 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடத்தியுள்ள அமைதி பேச்சு வார்த்தை வரலாற்றில் எழுதப் பட வேண்டிய நாள்.

கொரியா தீபகற்பம் 65 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாக பிரிந்தது. மேற்கத்திய நாகரீகம், சர்வதேச உறவு என மற்ற நாடுகளை போல தென்கொரியா திகழ்கிறது. ஆனால், வடகொரியாவில் நிலைமை தலைகீழ். அங்கு போடப்பட்டுள்ள இரும்பு திரைக்குள் என்ன நடக்கிறது என்பது உளவாளிகளுக்கே பிடிபடாத ஒன்று.

கிம் வம்சாவளியினர் வரிசையில் வடகொரியாவின் தற்போதைய அதிபராக உள்ள கிம் ஜாங் உன், ஏவுகணை, அணு குண்டு சோதனைகள் என கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை அலற விட்டுக்கொண்டிருந்தார். எங்கே, மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்தது.

அடுத்தடுத்து தன் மீது விழுந்த பொருளாதார தடைகள், நெருக்கமாக இருந்த சீனா, ரஷ்யா நாடுகளும் விலகி நின்றது போன்ற காரணங்களால் கிம் ஜாங் உன் மனம் மாறினார் என எடுத்துக்கொள்ளலாம். 2018 ஆண்டு பிறந்ததில் இருந்து கிம் தனது வில்லத்தனத்தை குறைத்து திடீர் ஹீரோ அவதாரம் எடுக்கத்தொடங்கினார் .

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக தனது நாட்டு அணியை தென்கொரியா அனுப்பியது, தனது நாட்டுக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளுக்கு விருந்து அளித்து அசத்தியது என நாம் எதிர்பார்த்ததை விட ஒருபடி மேலே கிம் சென்றார். இதற்கெல்லாம் உச்சகட்டமாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் சம்மதித்தார்.

விரைவில் டிரம்ப் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்நிலையில், சரித்திரத்தில் எழுதக்கூடிய நிகழ்வாக கிம் ஜாங் உன் இன்று தென்கொரிய மன்னில் கால் பதித்துள்ளார். இருநாட்டு எல்லையில் உள்ள பன்ஜோமூன் என்ற இடத்தில் தனது இடதுகாலை வைத்து தென்கொரியாவுக்குள் நுழைந்த கிம் ஜாங் உன்னை தென்கொரிய அதிபர் மூன் ஜே-இல் கைகுலுக்கி வரவேற்றார்.

கொரியா உடைந்து 65 ஆண்டுகளில் வடகொரிய அதிபர் தென்கொரியாவுக்குள் நுழைவது இதுவே முதன்முறை என்பதால் இந்த நாள் வரலாற்றில் எழுதப்பட்ட ஒன்றே. பன்ஜோமூன் பகுதியில் இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசியுள்ளனர்.

அணு ஆயுத சோதனைகளை மூட்டை கட்டி வைப்பது, கொரிய பிராந்தியத்தில் அமைதி திரும்பச்செய்வது, வர உள்ள அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை என முக்கிய விவகாரங்கள் இதில் இடம்பெற்றன. பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தலைவர்களும் இந்த வரலாற்றை எதிர்காலம் நினைவு கூற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மரச்செடி நட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...