அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ்

ஜூன் 23, 2018 846

நியூயார்க் (23 ஜூன் 2018): அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியேற்றச் சீர்திருத்தக் கொள்கையை (Zero Tolerance policy) டைம் இதழின் சமீபத்திய அட்டைப்படம் கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக ட்ரம்ப் பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக `Zero Tolerance Policy' என்னும் நடைமுறையைக் கொண்டுவந்தார் அதன்படி மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாகக் கடக்கும் நபர்கள் கைதுசெய்யப்படுவர்’ என்று அறிவித்தார் ட்ரம்ப். அதன்படி ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்குள் தகுந்த ஆவணம் இல்லாமல் சட்டவிரோதமாக நுழைபவர்கள் கைதுசெய்யப்படுவர். அவர்களின் குழந்தைகள், அவர்களிடமிருந்து பிரிக்கப்படும். ஆண்கள் தனிச் சிறையிலும், பெண்கள் தனிச் சிறையிலும், குழந்தைகள் தனிக் காப்பகத்திலும் தங்கவைத்தது அமெரிக்க அரசு.

இதனால், கடந்த 5 வாரங்களில் மட்டும் சுமார் 2,000 குழந்தைகள், அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப்பின் இந்தக் கொள்கைக்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். எல்லா திசைகளிலும் எதிர்ப்புக் கிளம்பியதால் கடந்த புதன்கிழமை தன் கொள்கையில் இருந்து பின்வாங்கினார் ட்ரம்ப். `இனி பெற்றோர்களும் குழந்தைகளும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள். ஆனால், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் துளியும் சகிப்புத்தன்மை இருக்காது’ என அறிவித்தார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் Zero Tolerance கொள்கையால் பெற்றோரைப் பிரிந்து குழந்தைகள் தவித்ததை டைம் இதழ் தன் அட்டைப்படத்தில் பிரதிபலித்துள்ளது. டைம் இதழின் அந்த அட்டைப்படப் புகைப்படத்தை எடுத்தது புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படக் கலைஞர் ஜான் மூர்.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் தன் தாயை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றதால், இரண்டு வயது சிறுமி அழுதுகொண்டு நிற்கும் காட்சியை படம்பிடித்திருந்தார் ஜான் மூர். அந்தப் புகைப்படத்துடன் ட்ரம்ப்பின் படத்தை இணைத்து அட்டைப் படமாக்கியுள்ளது டைம் இதழ்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...