தாய்லாந்தில் சிறுவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் பலி!

ஜூலை 07, 2018 501

பாங்காங் (07 ஜூலை 2018): தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 - 16 வயதுடைய சிறுவர்கள், 11 பேர் மற்றும் 25 வயதுடைய பயிற்சியாளர் ஆகியோர், கடந்த மாதம், 23ல், அப்பகுதியில் உள்ள, தாம் லுயாங் குகைக்கு சென்றனர். குகைக்குள் சற்று துாரம் சென்றதும், பலத்த மழை காரணமாக, மழை நீர், குகையை சூழ்ந்ததால், அவர்களால், பல நாட்கள் ஆகியும் வெளியேற முடியவில்லை. தாய்லாந்து ராணுவத்துடன் சேர்ந்து, அமெரிக்க வீரர்களும், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறுவர்கள், 11 பேரும், தாங்கள் நலமாக இருப்பதாக கூறும், வீடியோ வெளியானது. அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக, பேரிடர் மீட்பு நிபுணர் குழுவினர், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடத்தை திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்க மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குகையிலிருந்து தண்ணீரை வெளியே எடுக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குகையில் ஆக்சிஜன் அளவு குறைந்து வந்ததால் சிறுவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள் என குகையினுள் ஏர் டேங்குகள் பொருத்தும் வேளையில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அப்பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற வீரர் நேற்றிரவு பலியானார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...