தாய்லாந்து குகையில் இருக்கும் சிறுவர்கள் பெற்றோருக்கு கடிதம்!

July 07, 2018

பாங்காக் (07 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கியிருக்கும் சிறுவர்கள் அவர்களது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 - 16 வயதுடைய சிறுவர்கள், 11 பேர் மற்றும் 25 வயதுடைய பயிற்சியாளர் ஆகியோர், கடந்த மாதம், 23ல், அப்பகுதியில் உள்ள, தாம் லுயாங் குகைக்கு சென்றனர். குகைக்குள் சற்று துாரம் சென்றதும், பலத்த மழை காரணமாக, மழை நீர், குகையை சூழ்ந்ததால், அவர்களால், பல நாட்கள் ஆகியும் வெளியேற முடியவில்லை. தாய்லாந்து ராணுவத்துடன் சேர்ந்து, அமெரிக்க வீரர்களும், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறுவர்கள், 11 பேரும், தாங்கள் நலமாக இருப்பதாக கூறும், வீடியோ வெளியானது. அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக, பேரிடர் மீட்பு நிபுணர் குழுவினர், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடத்தை திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்க மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குகைக்குள் சிக்கியிருக்கம் சிறுவர்கள் தங்கள், பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாங்கள் நலமுடன் உள்ளதாகவும், மீட்புப்படையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தாங்கள் விரைவில் மீட்கப்படுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சியாங் ராய் மாகாண ஆளுநர், சிறுவர்களுக்கு மூச்கை அடக்கும் பயிற்சி கற்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சிறுவர்களை மீட்க தொடர்ந்து முயன்று வருவதாகவும், அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குகை அமைந்துள்ள பகுதியில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், குகையை வெள்ளம் சூழும் ஆபத்து உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!