பரபரப்பான சூழ்நிலையில் புதின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தை

ஜூலை 16, 2018 474

பின்லாந்து (16 ஜூலை 2018): ரஷியா - அமெரிக்கா அதிபர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் பின்லாந்தில் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபராக பதிவியேற்ற பிறகு ட்ரம்ப், ரஷியா அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதில்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடைபெற்ற பொருளாதார மாநாடுகளில் அவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மட்டுமே சந்தித்தனர். இந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தனர்.

இதன் விளைவாக பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி நகரில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ட்ரம்பும், புதினும் முதலில் தனிப்பட்ட முறையிலும் பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர் டிரம்பும், புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பின்லாந்தில் சந்திக்க இருப்பதால் தலைநகர் ஹெல்சின்கி நகர் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற உள்ள இந்த சந்திப்பு, உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...