அமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி!

செப்டம்பர் 15, 2018 537

கரோலினா (15 செப் 2018): அமெரிக்காவின் கரோலினா பகுதியை தாக்கி வரும் ஃபுளோரன்ஸ் புயலில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளியன்று வடக்கு கரோலினாவில், ஒன்றாம் நிலை புயலாக உருவான ஃபுளோரன்ஸ் சூறாவளி, விரிட்ஸ்வில்லி கடற்கரையில் மண்சரிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய வானிலை சேவையின் தகவல்படி தற்போது மணிக்கு 110கிமீ வேகத்தில் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது. ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...