பூமிக்குக் கீழே செல்கிறது சிங்கப்பூர் நகரம்! - Inneram.com Exclusive!

டிசம்பர் 27, 2018 861

சிங்கப்பூர் (27 டிச 2018): கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸிட்டி ஆஃப் எம்பர். இதில், தரைக்கு அடியில் நகரங்கள் இருப்பதாகக் கதையில் காட்டுவார்கள். கற்பனையில் திரைப்படத்தில் கண்டது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

வானுயர்ந்த தோட்டங்கள் ஆகட்டும், கடலுக்குக் கீழே சுரங்க ரயில் பாதைகள் MRT ஆகட்டும்; கட்டிடக் கலையில் உலகிற்கு முன்னோடியாக திகழ்வது சிங்கப்பூர் நகரம்!

ஏறத்தாழ விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை நகரத்தின் பரப்பளவே கொண்ட சிங்கப்பூர் நாட்டில், எதிர்வரும் 2030 ஆம் வருடத்தில் 70 லட்சம் மக்கள் வசிப்பார்கள் என்ற புள்ளி விபரங்கள் சிங்கப்பூர் அரசை கவலை கொள்ளச் செய்துள்ளது. (inneram.com)

ஏற்கனவே சூழல் மாற்றம், குளோபல் வார்மிங் அடிப்படையில் கடல் மட்டம் லேசாக உயர்ந்து சிங்கப்பூரின் நிலப்பரப்பு சுருங்க ஆரம்பித்துள்ள நேரம். ஆனால், சோர்ந்து விடவில்லை. சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்து விட்டனர்.

உயர்ந்த கட்டிடங்கள் செங்குத்தாகப் பெருகி வானை முட்டிக் கொண்டிருக்கும் வேளையில், தரை பரப்பளவை அகலப் படுத்த இயலாத அளவிற்கு வளர்ந்து விட்டது சிங்கப்பூர் நகரம். வேறு வழி? "தரை லெவல்" என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கொடுத்து தரைக்கு அடியில் வளர்ச்சி!

முதற்கட்டமாக, சிங்கப்பூர் நகர தரைமட்டங்களில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், ஏரிகள், பார்க்கிங், சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பலவற்றை பூமிக்குக் கீழே கொண்டு சேர்ப்பது தான் அந்த திட்டம்.

இத்துடன், மக்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தரைக்கு அடியில் உள்ள வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை தாக்குப் பிடிக்கும் வண்ணம் பல்வேறு தொழில் நுட்பங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

பூமிக்கு அடியில் சிங்கப்பூர் நகரம் எனும் செய்தி பலருக்கு வியப்பைக் கொடுத்தாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கும், மளமள வென்று உயர்ந்து கொண்டே செல்லும் தரை சதுர அடியின் விலைக்கும் விடை இதுவே என்பதில் வியப்பில்லை. (inneram.com)

பல நல்ல விஷயங்களுக்கு உலகின் முன்னோடியான சிங்கப்பூர், பூமிக்கடியில் உருவாகும் நகரத்திற்கும் முன்னோடியாக இருக்கும் என நம்புவோம்.

- Mohamed Sardhar

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...