விசாரணையை தொடங்கியது மலேசியா!

ஏப்ரல் 22, 2019 436

கோலாலம்பூர் (22 ஏப் 2019): புதைகுழிகள், ஆட்கடத்தல் முகாம்கள் பற்றி விசாரணையை தொடங்கியிருக்கும் மலேசிய அரசு தொடங்கியுள்ளது.

2015ல் மலேசியா- தாய்லாந்து எல்லையில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் ஆட்கடத்தல் முகாம்கள் குறித்து மலேசிய அரசு பொது விசாரணையை தொடங்கியிருக்கிறது. இந்த புதைகுழிகள் கண்டறியப்பட்ட பொழுது அது இருநாட்டு எல்லைகளிலும் பெரும் நெருக்கடியாக உருவெடுத்தது.

அந்த வேளை, தெற்கு தாய்லாந்து மற்றும் வடக்கு மலேசியாவில் உள்ள அடர்த்தியான வனப்பகுதிகளில் தங்கள் முகாம்களை அமைத்து ஆட்கடத்தல்காரர்கள் செயல்பட்டு வந்தது அம்பலமாகியது. குறிப்பாக மியான்மர் மற்றும் வங்கதேசத்திலிருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள், வங்கதேசிகளை கடத்தி வரும் செயலில் ஆட்கடத்தல்காரர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நேரடி சாட்சியங்களும் அதை அம்பலப்படுத்தின.

இவ்வாறான சூழலில், கண்டறியப்பட்ட 139 புதைகுழிகள் மற்றும் 12 காட்டு முகாம்கள் குறித்து விசாரணை நடத்தியதில் முறைகேடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 2019ல் இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என மலேசிய அரசு தெரிவித்தது.

கடந்த மாதம், மலேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் ஃபோர்டிபை ரைட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆதாரங்களை அழிக்கும் விதமாக கண்டறியப்பட்ட முகாம்களில் ஒன்றை அதிகாரிகள் அழித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான முகாம்களை கண்டறிவதில் தாய்லாந்து தீவிரம் காட்டியபொழுது, ஆயிரக்கணக்கான அகதிகள்/ இடம்பெயர்வாளர்களை ஆட்கடத்தல்காரர்கள் சிறிய படகுகளில் தவிக்கவிட்டு சென்றனர்.

இந்த நிலையில், மனித புதைகுழிகள் மற்றும் ஆட்கடத்தல் முகாம்கள் குறித்து தொடங்கப்பட்டுள்ள விசாரணை பல உண்மைகளை அம்பலப்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...