ஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்!

ஆகஸ்ட் 21, 2019 365

கோலாலம்பூர் (21 ஆக 2019): ஜாகீர் நாயக் விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது நெருக்கடியான நிலையில் உள்ளதாக அம்னோ துணைத் தலைவர் முகம்மது ஹசன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் சமீபத்தில் ஜாகிர் நாயக் பேசிய பேச்சு அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறுபான்மையினரான சீனர்கள், இந்துக்கள் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்னோ துணைத் தலைவர் முகம்மது ஹசன், "மலேசியாவில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களின் நல்லிணக்கம் இந்த நாட்டின் வரையறுக்கும் பண்பாக மாறியுள்ளது. எனவே, இந்த நல்லிணக்கத்தை அச்சுறுத்த முயற்சிக்கும் எவரும் அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். கோத்தா பாருவில் ஜாகிர் கூறியது உண்மை மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதோடு, மலேசியாவில் உள்ள சமூகங்களின் அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றால், அவர் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அதற்குண்டான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றுஅவர்நேற்றுசெவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டிருந்தார்.

பேச்சு சுதந்திரம் என்பது மத்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமை என்றாலும், அது முழுமையானதல்ல என்று முகமட் கூறினார்.

“மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் நிலை, தேசியத்தை இழிவுபடுத்தும் சுதந்திரம் யாருக்கும் இல்லை, ஓர் சிறந்த அறிஞர் அல்லது அரசியல்வாதிக்கு கூட இல்லை" என்றார்.

மேலும் ஜாகீர் நாயக்கை நேரடியாக குறிப்பிட்டுள்ள அவர், "ஜாகீர் அவர்களுக்கு, நீங்கள் இந்த நாட்டில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒரு முன்னணி போதகர். எனவே புத்திசாலித்தனமாக இருப்பதுடன், அனைவருக்கும் இஸ்லாத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருப்பது உங்கள் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மலேசியா அரசாங்கம் உங்களுக்கு எதிராக செயல்பட்டால் அதை நீங்கள் குறை கூற முடியாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , ஜாகீர் நாயக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவர் இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு அனுப்பப்பட்டால் அங்கு அவருக்கு நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படுமா? என்பதும் கேள்வியாக உள்ளது என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், ஜாகிரை அனுப்பாவிட்டால் பிற சமூகங்களின் மனதை புன்படுத்தும் நிலையும் ஏற்படும், ஆகவே பிரதமர் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...