பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 19 பேர் பலி - 300 பேர் காயம்!

செப்டம்பர் 24, 2019 349

லாகூர் (24 செப் 2019): பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19 பேர் பலியானதாகவும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே அமைந்திருந்தது.

"இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழமுள்ளது. மிர்பூர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது" என பாகிஸ்தான் முதன்மை வானிலை வானிலை அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. பாலங்கள் சேதமடைந்துள்ளன.

மாலை 4.31 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி பஞ்சாப் மற்றும் சண்டிகரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் ஜாட்லான் என்ற இடத்தில் இரண்டு பாலங்கள் இதில் சேதமடைந்துள்ளன. மேலும் சிந்து நதியின் துணை நதிகளில் ஒன்றான ஜீலம் நதிக் கால்வாயில் ஏற்பட்ட பிளவு காரணமாக அருகில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கோரிசான், ஜாட்லான், பிம்பர் ஆகிய பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிபிசி செய்தியாளருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மிர்பூருக்கு செல்லும் சாலை பல இடங்களில் பிளந்துள்ளது. மிர்பூரில் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்பு, தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளதால் முழு தகவல் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...