பாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை!

அக்டோபர் 14, 2019 186

டோக்கியோ (14 அக் 2019): ஜப்பானில் ஏற்பட்ட ‘ஹிகிபிஸ்’ புயல் காரணமாக. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஹிகிபிஸ் புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே பலத்த மழை பெய்யத்தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ‘ஹிகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது.

இதன்காரணமாக அங்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெளுத்துக்கட்டியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடுதான்.

டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்ளிட்ட 7 பிராந்தியங்களை சேர்ந்த 42 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 14 ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்தப் புயலும், பெருமழையும் கிழக்கு ஜப்பானில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. 14 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

ஹிகிபிஸ் புயல், மழையையொட்டி நடந்த சம்பவங்களில் 25 பேர் பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். நிலச்சரிவால்தான் பலரும் பலியானதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...