பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!

அக்டோபர் 29, 2019 161

இஸ்லாமாபாத் (29 அக் 2019): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு என கருதி சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது.

எனவே அவருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் ‘ஏஞ்சினர்’ வகை நெஞ்சுவலியால் அவதிப்படுவது தெரிய வந்தது. ரத்தத்தில் உள்ள அணுக்கள் படிப்படியாக குறைந்து இதயத்துக்கு வரும் ரத்த அளவு குறைவதே இந்த நோயின் தன்மையாகும்.

சிறையில் வைத்து தனது தந்தைக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதால் தான் உடல் நிலை பாதிப்பட்டதாக நவாஸ் ஷெரீப்பின் மகன் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக குறைந்தது. இதனால் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்தது. உடனே அவர் லாகூரில் உள்ள ‘சர்வீஸ்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர கிசிச்சை அளித்து வருகின்றனர். ரத்தத்தில் அணுக்களை அதிகரித்து அவரது உயிரை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...