பாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்!

நவம்பர் 08, 2019 376

இஸ்லாமாபாத் (08 நவ 2019): பாகிஸ்தான் மாணவி நம்ரிதா சாந்தினி மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் மருத்துவ மாணவர் நம்ரிதா சாந்தினி. பல் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி தங்கியிருந்த விடுதி அறை வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 16 ம் தேதி மாணவியின் தோழி ஒருவர் விடுதி அறைக்குள் சென்ற போது நம்ரிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவியின் அறையிலிருந்து தூக்க மாத்திரைகள் கண்டெடுத்தனர்.

மாணவியின் மரணம் தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில் (histopathological examination report)மருத்துவ மாணவி இயற்கைக்கு மாறான காரணங்களால் இறக்கவில்லை அல்லது விஷம் குடிக்கவில்லை. விஷம் அருந்தியிருந்தால் அது அவரது உடல் பாகங்களில் மாற்றங்களைக் காட்டியிருக்கும். அவரது இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கல்லீரலில் அசாதாரண அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையைக் கொண்டு போலீஸார் அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறினர். ஆனால், மாணவியின் பெற்றோர்கள் இதை மறுத்தனர். மேலும், மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனப் போராட்டத்திலும் இறங்கினர்.

இந்நிலையில் மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப் பட்டிருப்பதற்காக ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் அவர் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறப்படுவதிலும் சந்தேகம் வலுக்கிறது.

இதனை அடுத்து மாணவி நம்ரிதா சாந்தினியின் மரண வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...