அமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு!

Share this News:

நியூயார்க் (04 ஜூலை 2020): சாதிய பாகுபாட்டுடன் இரு அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி சிஸ்கோ நிறுவனத்தின் மீது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது.

அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லா என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

என்ன நடந்தது?

நியூயார்க் டைம்ஸ் தரும் தகவல்களின்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஓர் ஊழியரை இரண்டு மேலதிகாரிகள் தொடர்ந்து சாதிய பாகுபாட்டுடன் நடத்தி வந்துள்ளனர்.

அமெரிக்காவில் சாதியம் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அதனால் நேரடியாக சாதிய பாகுபாட்டை தடுக்கும் சட்டங்கள் ஏதும் வேலைவாய்ப்புகள் தொடர்பான அமெரிக்க சட்டத்தில் இல்லை. ஆனால், மத பாகுபாடு போல சாதிய பாகுபாடு இந்து மதத்திற்குள் இருப்பதாக தங்களது வழக்கு குறிப்பில் கலிஃபோர்னியா வேலைவாப்பு துறை குறிப்பிட்டுள்ளது.

சாதியபாகுபாடுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சிஸ்கோ நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக இருக்கிறார்.

அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சம்பள மற்றும் பதவி உயர்வுகள் தடுக்கப்பட்டிருக்கிறது.

சிலிகான்வேலியில் உள்ள மற்ற நிறுவனங்களைப் போல சிஸ்கோவிலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள் மற்றும் பிற ஆதிக்க சாதியினை சேர்ந்தவர்கள்.

நிறுவனம் கூறுவது என்ன?

சிஸ்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராபின், “அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பணிசூழலை உண்டாக்குவதில் சிஸ்கோ உறுதியாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லாவும் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தொடரும் சாதிய பாகுபாடு

அமெரிக்க மக்கள் உரிமை அமைப்பான ஈக்வாலிடி லேப்ஸ் 2018 ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அமெரிக்கப் பணியிடங்களில் 67 சதவீத தலித்துகள் மோசமாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.


Share this News: