வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்!

Share this News:

புதுடெல்லி (06 ஜூலை 2020):காற்றிலும் கொரோனா பரவும் என்பதால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனோ வைரஸ், காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கையில், தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள் காற்றில் மிதந்து செல்வதால் கொரோனா பரவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் கொரோனா நோயாளி விடும் மூச்சுக் காற்றில் உள்ள நீர்த்திவலைகளும் காற்றில் மிதந்து நோய் பரவும் என்றும் விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு தங்கள் ஆய்வு முடிவை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.

காற்றின் மூலம் கொரோனா பரவாது என்ற தனது முந்தைய நிலையை உலக சுகாதார நிறுவனம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர். தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தி இருந்தது.

இதை மாற்றி, கொரோனா-வை (Airborne Infection) காற்றின் மூலம் பரவக்கூடிய நோயாக அறிவியுங்கள் என நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெளியில் வரும் போது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிய விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Share this News: