சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

லண்டன் (11 மார்ச் 2020): இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிசும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. இங்கிலாந்தில் தற்போது வரை கொரோனா வைரசுக்கு 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி நாடின் டோரிசும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த மந்திரி நாடின் டோரிஸ், தற்போது தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, குணம் அடைந்து வருவதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடின் டோரிஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட நூற்றுக்கணக்கானோரைத் தொடர்ந்து சந்தித்துள்ளார். இதனால், கொரோனா வைரஸ் அவர் மூலமாகப் எவருக்கும் பரவியிருக்குமோ? என்ற கவலை, உடனடியாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply