உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான கூடுதல் விபரங்கள்:

ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது. கடந்த சில நாட்களாக அதனை கடுமையாக மறுத்து வந்த ஈரான், சற்றுமுன் இதனை ஒப்புக் கொண்டுள்ளது.

விமான எண் 752 தவறுதலாக தகர்க்கப்பட்டதாக ஈரானின் Press TV அறிவித்துள்ளது. உக்ரைனின் பயணிகள் விமானம், ஈரானின் ராணுவ எல்லைக்கு அருகில் பறக்கும்போது இந்த தாக்குதல் ஏற்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

தவறுதலாக நேர்ந்து விட்ட இந்த தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று மன்னிப்பைக் கோரியுள்ள ஈரான் ராணுவம், இதற்கான முழு ஆய்வினையும் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இறந்த பயணிகளுக்கான இழப்பீடுகளுக்கும் ஈரான் அரசு பொறுப்பேற்கும் என்பதாக தெரிகிறது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இச் செய்தி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

ஹாட் நியூஸ்: