10 நிமிட சார்ஜில் 400 கிலோ மீட்டர்: சூப்பர் பேட்டரி!

363

நியூயார்க்(19/01/2021): வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்த கவலையும் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எடுத்துவருகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கடந்து காற்றை மாசுபடுத்தாத பேட்டரி சார்ஜ் மூலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஆனால், எண்ணெயில் இயங்கும் வாகனங்கள் அளவுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் வேகம் இல்லை. மட்டுமல்ல, பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு, ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அந்தச் சக்தி மூலம் வாகனம் பயணிக்கும் தூரம் போன்றவையெல்லாம் எண்ணெயால் இயங்கும் வாகனம் அளவுக்கு இல்லை. கூடுதலாக, அதன் தயாரிப்பு செலவும் அதிகமாக இருந்து வந்தது.

இதைப் படிச்சீங்களா?:  ராமர் கோவில் முக்கியமா? பெட்ரோல் முக்கியமா? - மத்திய அரசை சாடும் சிவசேனா!

இது தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொறியாளர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்ட வந்த நிலையில், அமெரிக்காவின் பென் மாகாண பல்கலை கழக பொறியாளர்கள் அதற்கான தீர்வினைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் வடிவமைத்துள்ள புதிய லிதியம் அயன் பாஸ்பேட் பேட்டரி முழு சார்ஜ் ஆக 10 நிமிடங்கள் போதுமானது. மிக மிக எடை குறைந்த இந்த பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர் வரை வாகனம் பயணிக்கும். செலவு குறைந்த இந்த பேட்டரியின் ஆயுள் காலம், குறைந்தது 2 லட்சம் மைல்கள்.

இந்த பேட்டரி விரைவில் சந்தைக்கு வருமென பென் பல்கலை கழக பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். இது, போக்குவரத்து உலகில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கப் போகிறது.