ஜித்தாவில் கோலாகலமாக நடைபெற்ற சகோதரத்துவ சங்கமம் - மக்கள் திரள் மாநாடு!

பிப்ரவரி 04, 2019 588

ஜித்தா (04 பிப் 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் இந்தியா பிடர்னிட்டி ஃபோரம்(IFF) மற்றும் யுனிவர்சல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி(UIC) இணைந்து 'சகோரத்துவ சங்கமம்' என்ற பெயரில் மாபெரும் மக்கள் திரள் மாநாடு பிப்ரவரி 2019 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது .

நிகழ்ச்சியின் ஆரம்பமாக குழந்தைகளின் பாடல்கள் உள்ளிட்ட கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின், ஜிஸான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் எஸ்.ஏ. தமீமுல் அன்சாரி அவர்கள் 'குழந்தைகள் வளர்ப்பு' என்ற தலைப்பின் கீழ், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் செய்யவேண்டியவை பற்றிய ஆலோசனைகளை சிறப்பாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு IFFன் யான்பு நகரத் தலைவர் இஸ்ஹாக் அவர்கள் வரவேற்புரை வழங்க மண்டலத் தலைவர் பயாஸ் சாகிப் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தலைவர் அல் அமான், விமன்ஸ் பிடர்னிட்டி ஃபோரத்தின் தலைவர் ராஸியா, ஸ்டூடண்ட் பிடர்னிட்டி ஃபோரத்தின் உறுப்பினர் மாணவி பஹ்மிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அடுத்ததாக யுனிவர்சல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனியின் மேலாளர் அப்துல் மஜீத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியாக IFF ஜித்தா தமிழ் பிரிவின் தலைவர் அமீர் சுல்தான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த திருக்குர்ஆன் சிந்தனையாளர் விருதான ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி விருது M.B. முஹைதீன் கஸ்ஸாலி அவர்களுக்கும், சிறந்த கல்வியாளர் விருதான மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் விருது ரஸாக் முஹம்மது ஜாவித் அவர்களுக்கும், சிறந்த வணிகர் விருதான B.S. அப்துர் ரஹ்மான் விருது S.A.S. சதக்கத்துல்லாஹ் அவர்களுக்கும்,சிறந்த அழைப்பாளர் விருதான ஷஹீத் கூரியூர் முஹம்மது அலி ஜின்னா விருது சுல்தான் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த கால்பந்து, இறகு பந்து, ஓவியம், கிராத், கவிதை, பாடல், சமையல், மட்டைப்பந்து, கைவினை மற்றும் புகைப்படம் முதலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக கண்காட்சி அரங்கம் அமைந்திருந்தது. 'பாபர் மசூதி என்றும் நினைவில்' என்ற கருப்பொருளுடன் அமைக்கப்பட்டிருந்த இக்கண்காட்சி அரங்கத்தில் பாபர் மசூதி குறித்த வரலாற்று செய்திகள் பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. மேலும் கைவினைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் பரிசு பெற்ற படைப்புகளும் இங்கே காட்சி படுத்தப்பட்டிருந்தன.

IFF ஜித்தா செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அல்ஹாஃபிஸ் நைனா முஹம்மது அவர்கள் ஓதிய கிராத்தும் மாணவன் சிபக்கத்துல்லாஹ் அவர்களின் அதானும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சிக்கு ஜித்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...