அபுதாபி இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித்தது!

மார்ச் 01, 2019 489

அபுதாபி (01 மார்ச் 2019): அபுதாபியில் நடைபெறும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் சிறப்பு பார்வையாளராக சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் இன்றைய கூட்டத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துற அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி புறக்கணித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் 46-வது மாநாடு மார்ச் 1 (இன்று) மற்றும் 2 தேதிகளில் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் கூடி சில முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர். இந்த மாநாட்டில் ‘கவுரவ பார்வையாளராக’ பங்கேற்க வருமாறு முதன்முதலாக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

இதைதொடர்ந்து, இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு கூட்டத்தில் இன்று பங்கேற்ற சுஷ்மா சுவராஜ், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பியதற்காக நன்றி தெரிவித்தார்.

இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இடங்களில் நான்கில் ஒரு பகுதியை பிடித்துள்ளன. பழமையான நாகரிகம் கொண்ட இந்த நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் இந்த அவையில் அமர்ந்திருப்பதை நான் கவுரவமாக கருதுகிறேன்.

அறிவின் சிகரமாக, அமைதியின் உயர்ந்த அடையாளமாக, நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக, பல மதத்தினர் இணைந்து வாழும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஒன்றான இந்தியாவின் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நான் வந்திருக்கிறேன்.

எங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாகவும், 130 கோடி இந்திய மக்களின் சார்பாகவும், இந்தியாவில் வாழும் ஒரு கோடியே 85 லட்சம் இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் சார்பாகவும் எங்களது நல்வாழ்த்துகளை இந்த அமைப்புக்கு தெரிவித்து கொள்கிறேன்.

ரிக் வேதத்தில் உள்ள ‘கடவுள் ஒன்றே. ஆனால், கற்றவர்களை கடவுளை பல வடிவங்களில் சித்தரிக்கின்றனர்’ என்னும் பழமையான சமஸ்கிருத வேதவாக்கியத்தை நாங்கள் தழுவி வாழ்வதால் எங்களால் வேற்றுமையிலும் ஒற்றுமையுணர்வை பாராட்ட முடிகிறது.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களல்லாத மக்களுடன் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களில் சிலர் மட்டுமே பயங்கரவாதிகளின் நச்சுப்பிரசாரத்துக்கு இரையாகின்றனர்.

பயங்கரவாதம் பல உயிர்களை பலி வாங்கிவதுடன், இந்த உலகத்தை அழிவுக்குள்ளாக்கி விட முயற்சிக்கிறது. பயங்கரவாதம் வளர வளர இதனால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எந்த வடிவத்தில் வந்தாலும், பயங்கரவாதத்தை ஒரு மதத்தை சீர்குலைக்கும் சக்தியாகவே நாம் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரானது எந்த மதத்துக்கும் எதிரான போர் அல்ல. இஸ்லாமிய மதம் என்றால் அமைதி என்று பொருள். அல்லாவின் 99 திருநாமங்களில் எந்த பெயரும் பயங்கரவாதத்தை குறிக்கும் பெயரல்ல. அதேபோல், அனைத்து மதங்களும் அமைதியையே விரும்பி, வலியுறுத்துகின்றன.

மனிதநேயத்தை நாம் காப்பாற்ற வேண்டுமானால், தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை உடனடியாக அழிக்க வேண்டும் என பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு நாம் கூற வேண்டும்.

நான் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இருந்து இங்கு வந்திருக்கிறேன். எங்களது ஒவ்வொரு பிரார்த்தனையும் ‘சாந்தி’ என்னும் அனைவருக்குமான அமைதி என்ற நோக்கத்தில்தான் முடிவடையும்.

உங்கள் மக்கள் மற்றும் உலகில் வாழும் அனைத்து மக்களிடையிலும் அமைதி, நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி, வளமை, மகிழ்ச்சி ஆகியவை என்றென்றும் நிலவ இந்தியாவின் சார்பில் எங்களது மனமார்ந்த ஆதரவையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையில், சுஷ்மா சுவராஜ் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடான பாகிஸ்தான் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முஹம்மது குரைஷி அரங்கத்துக்கு இன்று வராமல் புறக்கணித்ததால் அவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை காலியாக கிடந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...