குடும்ப சூழல் காரணமாக வளைகுடாவில் சம்பாதிக்கச் செல்லும் இந்தியர்களில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் பலர் சரியான அளவில் உடலை கவனிப்பதில்லை. சிறிய அறிகுறிகள் தெரிந்தாலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் சொந்த மருத்துவங்கள் மூலம் சரிசெய்ய முயல்கின்றனர். ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
சமீப காலமாக அதிகரித்து வரும் இந்தியர்களின் மன உளைச்சலும் நோய் பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. பல இடங்களில் சமூக அமைப்புகள் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. அதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் இந்தியர்களின் உடலில் பல நோய்கள் தாக்குதல் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நல்ல உடல் நிலையில் இருந்தாலும், மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.