துபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்!

ஜூன் 17, 2019 755

துபாய் (17 ஜூன் 2019): இந்தியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் துபாயில் பள்ளி வாகனத்தில் கண்ணயர்ந்து உறங்கியபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பைசல். கேரளா மற்றும் துபாயில் பல தொழில்களை செய்துவரும் இவர் பல ஆண்டுகளாக மனைவியுடன் துபாயில் உள்ள கராமா என்னுமிடத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் மூன்றாவது மகனான முஹம்மது பர்ஹான்(6), அல் குவோஸ் பகுதியில் உள்ள ஒரு கல்வி கூடத்தில் பயின்று வந்தான்.

நேற்று வழக்கம்போல் காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பள்ளி வாகனத்தில் ஏறிச்சென்ற முஹம்மது பர்ஹான், போகும் வழியில் கண்ணயர்ந்து உறங்கி விட்டான். பள்ளியை நெருங்கியதும் அனைத்து மாணவர்களும் கீழே இறங்கி சென்றதும் டிரைவர் வாகனத்தை பூட்டிவிட்டு வேறு வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.

மாலை 3 மணியளவில் வகுப்புகள் முடிந்து பிள்ளைகள் வெளியே வந்தபோது வாகனத்தை திறந்த டிரைவர் உள்ளே முஹம்மது பர்ஹான் உயிரற்ற பிரேதமாக இருக்கையில் சரிந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பள்ளி நிர்வாகம் அளித்த தகவலையடுத்து விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முஹம்மது பர்ஹானின் மூத்த சகோதரிக்கு அடுத்த மாதம் 25-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தில் நிகழ்ந்த இந்த பரிதாப மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...