பஹ்ரைன் சிறையில் உள்ள 250 கைதிகள் விடுதலை - பஹ்ரைன் அரசு முடிவு!

ஆகஸ்ட் 25, 2019 364

மனாமா (25 ஆக 2019): பிரதமர் மோடி பஹ்ரைன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு சிறையில் இருக்கும் 250 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா-பஹ்ரைன் இடையே வலுவான நட்புறவை மலரச் செய்தமைக்காக, பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய விருதான அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது பிரமதர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார்.

பஹ்ரைன் நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவைச் சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இந்தியாவுக்கும், பஹ்ரைனுக்கும் இடையே வலுவான நட்புறவை மலரச் செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய 'அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது' அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் வாயிலாக தெரிவிக்கையில்., "பஹ்ரைன் நாட்டின் அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருதை பணிவுடன் ஏற்கிறேன். இந்தியாவுடான வலிமையான நட்புறவுக்கு அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே ஸ்திரமான நட்புறவு ஏற்பட இந்த பயணம் உதவும். மூத்த தலைவர்களுடான ஆலோசனை, ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் ஆகியவை என்றென்றும் நினைவில் இருப்பவை. பஹ்ரைன் நாட்டு மக்களின், அரசின் கவனிப்பு மிகச்சிறப்பாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மனாமா நகரில் உள்ள ஸ்ரீநாத்ஜி கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றார். புனரமைப்பு பணிகள் முடிந்துள்ள அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி, அங்கிருந்த இந்தியர்களிடம் உரையாடினார்.

இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பின் எதிரொலியாக நல்லெண்ண நடவடிக்கையாக சிறையில் உள்ள இந்தியக் கைதிகள் 250 பேருக்கு மன்னிப்பு வழங்க பஹ்ரைன் அரசர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...