இந்தியாவில் சவூதி அராம்கோ நிறுவனம் - பிரதமர் மோடி தகவல்!

அக்டோபர் 29, 2019 224

ரியாத் (29 அக் 2019): 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதிஅரேபியா சென்றடைந்த பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் அரபு நியூஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த பேட்டியில், சவுதி அரேபியா உடனான உறவை எடுத்துரைத்தார். வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில், 15 சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்து வாங்குவதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வாங்குபவர், விற்பவர் என்ற நிலையில் இருந்து நெருங்கிய உறவை நோக்கி நகர்ந்து வருவதாக அவர் கூறினார்.

இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு சவுதி அரேபியா முக்கிய ஆதாரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கச்சா எண்ணெய் விலை நிலையாக இருப்பது, உலக பொருளதார வளர்ச்சிக்கும், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சவுதி அராம்கோ நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை தொடங்க இருப்பதாகவும் அப்போது அவர் கூறினர். அடுத்த ஆண்டு ஜி 20 நாடுகளின் மாநாட்டை சவுதி அரேபியா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 2022 ஆம் ஆண்டு இந்தியா ஜி20 மாநாட்டை நடத்தும் என்றும் பிரதமர் கூறினார். பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு போன்ற துறைகளில் சவுதி அரேபியாவுடன் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாக மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

முன்னதாக சவுதிஅரேபியா சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடியை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து சவுதி மன்னரின் அரண்மைக்கு சென்ற பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்லாசிஸ் பின் சல்மான், சுற்றுச்சுழல்துறை அமைச்சர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அப்போது வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், தண்ணீர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சவுதிஅரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...