அரசை அதிர வைத்த பெண் அமைச்சரின் பேச்சு!

July 05, 2018

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.

தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் போராடிவந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு விடுதலைப்புலிகள் அமைப்புமீது கடுமையான போர் தொடுத்தது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, யாழ்ப்பாணம் பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். அதேபோல, விடுதலைப் புலிகள் பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். சில ஆண்டுகள் கழித்து நடந்த அரசியல் மாற்றத்தில், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மைத்ரிபால சிறிசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் சில தமிழ் அமைச்சர்களும் இடம்பெற்றனர். அந்தவகையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தமிழ்ப் பெண் விஜயகலா மகேஸ்வரன் பணியாற்றிவந்தார். இவர், இரண்டு நாள்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``உண்மையிலேயே இப்போது எங்கள் நிலைமை மோசமாக உள்ளது. கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் யாழ் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது, எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது நாங்கள் உணருகிறோம். ஆனால் இப்போதோ, இங்கு பாலியல் குற்றங்கள்தான் அதிகரித்துள்ளன. இதற்காகவா நாங்கள் அதிபரைத் தேர்ந்தெடுத்தோம். அதிபர் இப்போது கட்சியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாரே தவிர, தமிழ் மக்களைக் காப்பற்றுவதில்லை. நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், எங்களது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்" எனப் பேசினார். இந்நிலையில், ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்தவரே அரசை விமர்சித்துப் பேசியது இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அனைத்து எம்.பி-க்களும் விஜயகலா பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

இதற்கிடையே, விஜயகலா பேச்சுகுறித்துப் பேசிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Search!