விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ராஜினாமா!

July 05, 2018

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மைத்ரிபால சிறிசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் சில தமிழ் அமைச்சர்களும் இடம்பெற்றனர். அந்தவகையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தமிழ்ப் பெண் விஜயகலா மகேஸ்வரன் பணியாற்றிவந்தார். இவர், இரண்டு நாள்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``உண்மையிலேயே இப்போது எங்கள் நிலைமை மோசமாக உள்ளது. கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் யாழ் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது, எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது நாங்கள் உணருகிறோம். ஆனால் இப்போதோ, இங்கு பாலியல் குற்றங்கள்தான் அதிகரித்துள்ளன. இதற்காகவா நாங்கள் அதிபரைத் தேர்ந்தெடுத்தோம். அதிபர் இப்போது கட்சியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாரே தவிர, தமிழ் மக்களைக் காப்பற்றுவதில்லை. நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், எங்களது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்" எனப் பேசினார்.

இந்நிலையில் அவரது பேச்சு குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து விஜயகலா மகேஷ்வரன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தனக்கெதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.
ராஜினாமா கடிதத்தை வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் கூறினார். எனினும், அதற்கான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென குறிப்பிட்டார். மேலும் பதவி விலகுமாறு என்னை யாரும் கோரவில்லை. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காகவே நான் பதவி விலகினேன். எனக்கெதிரான விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவளிப்பேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!