ராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு!

November 08, 2018

கொழும்பு (08 நவ 2018): ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மலையக மற்றும் முஸ்லிம் தமிழ் கட்சிகளும் வாக்களிக்க முடிவு செய்துள்ளன.

இலங்கையில் நாடாளுமன்றத்தால் தேர்வுசெய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேயும் அண்மையில் அதிபர் மைத்திரியால் அறிவிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவும் ஒரே சமயத்தில் பிரதமர்களாக இருந்துவருகின்றனர். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பநிலை நீடித்துவருகையில், எதிர்த் தரப்பிலிருந்து எம்.பி-க்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மகிந்த - மைத்திரி தரப்பு ஈடுபட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ரணில் கட்சியுடன் கூட்டுவைத்து மகிந்த ராஜபக்சேவைத் தோற்கடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர் கட்சிகளின் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், ரணில் ஆட்சிக்கே ஆதரவு எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

ரிசாத் பத்யுதீன் தலைமையிலான அ.இ.ம காங்கிரஸ் கட்சியில் 5 எம்.பி-கள் உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி-தான் இருக்கிறார். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த 5 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி சார்பில் போட்டியிட்டு எம்.பி-க்களாக உள்ளனர். மலையகத் தமிழர் கட்சிகளின் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 6 எம்.பி-க்கள் இருக்கின்றனர். இன்று காலை அதிபர் மைத்திரியை அவரது செயலகத்தில் சந்தித்த த.மு.கூட்டணியின் தலைவரும் ரணில் அமைச்சரவை உறுப்பினருமான மனோ கணேசன், மகிந்த அமைச்சரவையில் சேருமாறு மைத்திரி விடுத்த அழைப்பை ஏற்க முடியாது என நேரிலேயே தெரிவித்துவிட்டார்.

முன்னதாக, மு.கா-வும் மகிந்த அமைச்சரவையில் இன்று பங்கேற்கும் என நிசாந்த முத்து ஹெட்டிகம எனும் துணை அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை மு.கா கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அ.இ.மக்கள் காங்கிரசும் தங்களுக்கே ஆதரவு வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே தமிழ்க் கூட்டமைப்பானது மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதாகத் தீர்மானித்துள்ள நிலையில், மலையகம் மற்றும் முஸ்லிம் தமிழர் கட்சிகளும் அவ்வாறே முடிவெடுத்திருப்பது, இலங்கை ஆட்சிப்பீட சதுரங்கத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!