நீரில் மூழ்கி இளைஞர் பலி

ஏப்ரல் 01, 2019 381

கொழும்பு (01 ஏப் 2019): லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சனியன்று மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். அப்புத்தளை தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதான திருமணமாகாத விஷ்வநந்தன் கோகிலநாதன் என்பவரே உயிரிழந்தவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்புத்தளை தோட்டத்திலிருந்து லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டிற்கு விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்ற குறித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி கொத்மலை ஓயாவில் 30.03.2019 அன்று மதியம் குறித்த இளைஞன் 3 உறவினர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து 30.03.2019 அன்று மாலை வேளையில் லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...