இலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

ஏப்ரல் 23, 2019 377

கொழும்பு (23 ஏப் 2019): இலங்கையில் அவசர நிலை பிகடனத்திற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 பேர் கொல்லப் பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. எனினும் பதற்றம் தொடர்வதால் அவசர நிலை பிரகடனத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

10 நாட்களுக்கு அதிகமாக இந்த நிலையை நீடிக்க வேண்டும் என்பதால் நாளை நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தினாலும், தேசிய அரச பேரவையின் 1978 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு தொடர்பில் 24 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...