இலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை!

ஏப்ரல் 26, 2019 769

கொழும்பு (26 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இதில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் ஊரான காத்தான் குடி மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமை பயங்கரவாதிகளால் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப் பட்ட தொடர் தற்கொலை தாக்குதலில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு உலகம் எங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மேலும் முஸ்லிம்கள் இந்த கொடூர தாக்குதலை கடுமையாக எதிர்க்கின்றனர். இப்பேற்பட்ட தாக்க்தல்களை மேற்கொள்பவர்கள் முஸ்லிம்களே அல்ல என்றும் அவர்கள் குற்றவாளிகளை கடுமையாக சாடுகின்றனர்.

இந்நிலையில் மிகக் கொடூரமான இச்செயலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட இலங்கை காத்தான்குடியை சேர்ந்த சஹ்ரான் ஹாசிம் தற்போது தலமறைவாக உள்ளான். அவன் உயிருடன் உள்ளானா? என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். குறிப்பாக காத்தான் குடி தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றது. அங்கு பலரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

சஹ்ரான் ஹாசிமின் இல்லத்தில் அவரது சகோதரியிடம் பிபிசி நடத்திய நேர்காணலில் அவர் கூறும்போது; "சஹ்ரான் என் தம்பி என்றாலும் இந்த கொடூர சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் நடந்த அன்று நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். இதனை யார் செய்திருப்பார்? என்று என் மன ஓட்டம் ஓடிக் கொண்டிருந்த போது, இப்படி ஒரு பேரிடியாக என் தம்பியின் பெயரும் வந்தது கண்டு அதிர்ந்தேன். சஹ்ரான் எங்களை விட்டுப் பிரிந்து சென்று இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன." என்றார்.

காத்தான் குடி சஹ்ரானின் சொந்த ஊர் என்பதாலேயே, தொடர் சோதனைகளும் பலரது கைது நடவடிக்கைகளாலும், மேலும் பழி வாங்கும் நடவடிக்கையாக வேறு எந்த சம்பவமும் நடக்க நேரிடுமோ என்ற அச்சத்திலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்று காத்தான் குடி முஸ்லிம்கள் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...