ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இலங்கையர்கள் நாடு கடத்தல்!

மே 31, 2019 552

கொழும்பு (31 மே 2019): இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற ஒரு குழந்தை உள்ளிட்ட 20 தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை நேற்று(மே 29) ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கொழும்புக்கு தனி விமானம் மூலமாக அனுப்பி வைத்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. அவர்களின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளதை ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கோர்மாக் உறுதி செய்துள்ளார்.

கடந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் வட மேற்கு கரையை அடையும் முயற்சியில் இந்திய பெருங்கடலில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் படகு பயணித்து இருக்கின்றது. அதனை அடையாளம் கண்ட அதிகாரிகள் படகை தடுத்து நிறுத்தி, தஞ்சக்கோரிக்கையாளர்கள் அனைவரையும் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவை படகு வழியாக அடையும் முயற்சி இலங்கை தொடர் குண்டுவெப்பு நிகழ்ந்த அடுத்த சில தினங்களில் அரங்கேறியிருக்கின்றது.

அதே போல், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு கடல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது தொடர்பாக பேசியுள்ள ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மெக்கோர்மாக், “மே மாத தொடக்கத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இப்படகு கிளம்பியுள்ளது. அதில் வந்த அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்,” என அவர் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, கடந்த வாரம் தென் இலங்கையிலிருந்து மீன்பிடி படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேரை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தியிருந்தது. அதற்கு முன்னதாக, மே 12ம் தேதி மட்டக்களப்பு பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 15க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கடந்த செப்டமர் 2013 முதல், இலங்கையிலிருந்து வந்த 10 ஆட்கடத்தல் படகுகளிலிருந்து 186 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தஞ்சக்கோரிக்கைகள் குறித்து எவ்வித முறையான பரிசீலணையுமின்றி தஞ்சக்கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பி அனுப்புவது சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சட்டவிரோதமானது என ஆஸ்திரேலியாவின் படகு கொள்கையை முந்தைய காலங்களில் ஐ.நா. விமர்சித்து இருக்கின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...